மும்பை: பிரபல இந்தி திரைப்பட நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் படங்களைத் தயாரித்து வருகிறது. கடந்த 2012-ம் அண்டு சல்மான்கான், கேத்ரினா கைஃப் நடித்த ‘ஏக் தா டைகர்’, இந்நிறுவனத்தின் முதல் ஸ்பை யுனிவர்ஸ் படம். இதன் தொடர்ச்சியாக, ‘டைகர் ஜிந்தா ஹை’, ‘வார்’, ஷாருக்கான் நடித்த ‘பதான்’ ஆகிய படங்களை உருவாக்கினர். இந்தப் படங்கள் வசூலில் சாதனைப் படைத்ததை அடுத்து இப்போது ‘டைகர் 3’ படத்தை உருவாக்கி உள்ளனர். ஆக்ஷன், த்ரில்லர் படமான இதில் சல்மான்கான், கேத்ரினா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
‘பதான்’ படத்தில் சல்மான்கான் கவுரவ வேடத்தில் நடித்தது போல இதில் ஷாருக்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தில் இருந்து கேத்ரினா கைஃப் தோற்றத்தைப் படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது.
படம் பற்றி கேத்ரினா கூறும்போது, “யஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி, ஜோயா (Zoya). ஜோயாவாக நடித்தது நம்பமுடியாத பயணம். இதன் ஆக்ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல விரும்பினோம். உடல் ரீதியாக இது எனக்குச் சவாலான படம். எப்போதும் ஆக்ஷன் காட்சிகளில் பங்கேற்பது உற்சாகமாக இருக்கும். நான் எப்போதும் போல் ஆக்ஷன் வகையின் ரசிகை” என்று தெரிவித்துள்ளார்.