கோலிவுட்டில் கமல்ஹாசன் போல பாலிவுட்டில் வித்தியாசமான படங்களுக்கும், அட்டகாசமான நடிப்புக்கும் புகழ்பெற்றவர் நடிகர் ஆமிர்கான். அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் சக்கை போடு போட்டு வசூல் சாதனைகள் படைக்கும். அதிலும் தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேறுபடுத்திக் காட்ட மெனக்கெடும் ஒரு சில நடிகர்களில் ஆமிர்கானும் ஒருவர்.
ஆமிர்கான் நடிக்கும் படங்களும் சரி, தயாரிக்கும் படங்களும் சரி வித்தியாசமானதாகவும், கதைக்களம் புதிதாகவும் இருந்தாலும் அவை பொழுதுபோக்கு படங்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். தொடர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திவரும் ஆமிர்கான் தற்போது இன்னொரு ஆச்சரியத்துக்கு தயாராகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆமிர்கான் தற்போது 'தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தான்' என்ற படத்தில் அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப் உள்ளிட்டோருடன் நடித்து வருகிறார். இது முடிந்ததும் புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கையைச் சொல்லும் 'சல்யூட்' படத்திலிருந்தும் ஆமிர்கன் விலகிவிட்டதாகத் தெரிகிறது.
ஆமிர்கானின் இந்த முடிவுக்குக் காரணம் மகாபாரதம். ஆம், அடுத்த பத்து வருடங்களுக்கு அவர் மகாபாரதம் கதையை அடுத்தடுத்த பாகங்களாக எடுக்கப் போகிறார் என்ற செய்திகள் உலவுகின்றன. இந்தப் படங்களை ஆமிர்கானே தயாரித்து நடிக்கவுமிருக்கிறார்.
'தக்ஸ் ஆஃ ஹிந்தொஸ்தான்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மகாபாரதக் கதைக்கான வேலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த வரிசையில் முதல் படத்தை, ஆமிர்கான் தயாரிப்பில் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இயக்குவார் எனத் தெரிகிறது. ஆமிர்கான் கிருஷ்ணன் அல்லது கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளாராம்.
இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மகாபாரதக் கதை பெரும் பொருட்செலவில் மோகன்லால் நடிப்பில் உருவாகவுள்ளதாக செய்திகள் வந்திருந்தன. எஸ்.எஸ்.ராஜமவுலியும் எதிர்காலத்தில் மகாபாரதக் கதையை எடுக்கும் ஆசை தனக்குள்ளது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.