பாலிவுட்

பத்மாவதி திரைப்பட விவகாரம்: ’இந்தியப் பெண்களின் கவுரவத்துக்கு பாதிப்பு எற்படாமல் இருக்க துணை நிற்பேன்’

செய்திப்பிரிவு

இந்தியப் பெண்களின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா காலத்திலும் துணை நிற்பேன் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா போன்ற அமைப்புகள் தொடர்ந்து அப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த ஜனவரியில் பத்மாவதி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.

இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தைத் தடை செய்யவேண்டும் என மகாராஷ்டிர சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெய்குமார் ராவல் கோரியுள்ளார்.

இது குறித்து மாநில அரசு, தணிக்கைத் துறைக்கு கடிதம் எழுதும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், பத்மாவதி திரைப்படம் தொடர்பான பிரச்சினை குறித்து பாஜக மத்திய அமைச்சர் உமா பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில், “திரைப்பட இயக்குநர், வரலாற்று அறிஞர்கள், போராட்டக்காரர்கள், திரைப்பட தணிக்கை வாரியம் ஆகியோர் அடங்கிய அமைப்பை ஏன் உருவாக்க கூடாது?  இந்திய பெண்களின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா காலத்திலும் துணை நிற்பேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'பத்மாவதி', டிசம்பர் 1-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT