பாலிவுட்

பத்மாவதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: ஷாஹித் கபூர் வேதனை

பிடிஐ

பாலிவுட் திரைப்படம் 'பத்மாவதி'க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், முன்கூட்டியே கருத்துகளை உருவாக்காதீர்கள் என்று நடிகர் ஷாஹித் கபூர் தெரிவித்துள்ளார்.

'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளும் திரிக்கப்பட்டதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரமும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அப்படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இதுகுறித்து அப்படத்தில் நடித்துள்ள ஷாஹித் கபூர், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''இந்த விஷயத்தை நீண்ட நாட்களாகக் கூறிவருகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு பின்பு முடிவு செய்யுங்கள். படத்துக்கு ஒரு வாய்ப்பை முதலில் கொடுங்கள். அதற்கு முன்னதாகவே கருத்துகளை உருவாக்காதீர்கள்.

படத்தில் எல்லோரின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் நாங்கள் மதிப்புக் கொடுக்க முயற்சித்திருக்கிறோம்.

எங்களால் முடிந்த அளவு படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். படம் குறித்து மக்கள் என்ன விமர்சித்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் அதற்கு முதலில் நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்றார்.

எதிர்ப்பின் பின்னணி

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்றுக் குறிப்புகளும் திரிக்கப்பட்டதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாஜக, ராஜ்புத் சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த ஜனவரியில் 'பத்மாவதி' படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.

இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அதைத் தொடர்ந்து, சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தை வெளியிடத் தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்படத்துக்கு தடை விதிக்க எந்தத் தேவையும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT