'பத்மாவதி' படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், படம் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றும், அவர்கள் பரப்புவது போல படத்தில் எந்த விதமான காட்சிகளும் இல்லை என்றும் அவர் தெளிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதன் தமிழாக்கம் பின்வருமாறு:
"வணக்கம். சஞ்சல் லீலா பன்சாலி ஆகிய நான் இந்த வீடியோ மூலம் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். 'பத்மாவதி' படத்தை அதிக பொறுப்புடனும், முயற்சிகளுடனும், நேர்மையுடனும் எடுத்துள்ளேன்.
ராணி பத்மாவதியின் கதை எப்போதுமே எனக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. இந்தப் படம் அவரின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றுகிறது. ஒரு சில வதந்திகளின் காரணத்தால், இந்தப் படம் விவாதத்துக்குரியதாக மாறிவிட்டது.
படத்தில் ராணி பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் கனவுப் பாடல் இருப்பதாக வதந்தி உருவாகியிருக்கிறது.
இதை நான் முன்னமே மறுத்திருந்தேன். அதற்கான எழுத்துப்பூர்வமான சாட்சியையும் காட்டிவிட்டேன். இன்று, இந்த வீடியோ மூலம் அதை மீண்டும் உறுதி செய்கிறேன். படத்தில் மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துமாறு ராணி பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்த விதமான காட்சியும் இல்லை.
ராஜபுத் கண்ணியத்தையும், மரியாதையையும் மனதில் வைத்தே இந்தப் படத்தை நாங்கள் பொறுப்புடன் உருவாக்கியுள்ளோம். படத்தில் மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துமாறு ராணி பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்த விதமான காட்சியும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நன்றி."
'பத்மாவதி' டிசம்பர் 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.