பாலிவுட்

பத்மாவதி படத்தை பிரிட்டனில் வெளியிட இங்கிலாந்து சென்சார் வாரியம் ஒப்புதல்

பிடிஐ

பாலிவுட் திரைப்படமான 'பத்மாவதி'யை இந்தியாவில் வெளியிட எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், இங்கிலாந்தில் வெளியிட அந்நாட்டு சென்சார் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

'பத்மாவதி' படத்துக்கு 12ஏ மதிப்பீடு அளித்துள்ள சென்சார் வாரியம், எந்த விதமான தணிக்கையையும் படத்தில் மேற்கொள்ளவில்லை. 12ஏ மதிப்பீடு என்பது 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் பெரியவர்களுடன் மட்டுமே வந்து படத்தைக் காண முடியும் என்பதாகும்.

இதுகுறித்து பிரிட்டிஷ் சென்சார் வாரிய இணையதளத்தில், ''தணிக்கை கோரிய 'பத்மாவதி' (12ஏ) படத்தில் மிதமான வன்முறை இருக்கிறது. படத்தின் அனைத்து பதிப்புகளும் கத்தரி இன்றி வெளியாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த ஜனவரியில் பத்மாவதி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.

இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் டிசம்பர் 1 என்று அறிவிக்கப்பட்ட வெளியீடு இந்தியாவில் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT