சக நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தனக்கு அசவுகரியமாக இருப்பதாக நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
இத்தேஃபக் என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, அக்ஷய் கன்னா ஆகியோருடன் சோனாக்ஷி நடித்துள்ளார். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக கரண் ஜோஹாருடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சோனாக்ஷி கலந்துகொண்டார்.
அதில், சித்தார்த்துடன் நெருக்கமாக இருந்து மயக்கும் காட்சிகளை ரசித்து நடித்தீர்களா என்ற கேள்விக்கு சோனாக்ஷி பதிலளிக்கையில், "ஒவ்வொரு நடிகருக்குமே சரியாக வராத விஷயம் என்று ஒன்று இருக்கும். அல்லது நடிப்பில் கொண்டு வர அசவுகரியமான விஷயமாக இருக்கும். சில சமயங்களில் அது நகைச்சுவையாக இருக்கலாம், உணர்ச்சிகரமான காட்சியாக இருக்கலாம் அல்லது சக நடிகருடன் நெருக்கமாக இருந்து மயக்கும் காட்சியாகவும் இருக்கலாம்.
எனக்கு அது (நெருக்கமாக இருந்து மயக்கும் காட்சி) மிகவும் அசவுகரியமாக இருந்தது. நான் நன்றாக நடிப்பவள் தான். அதனால் தான் எனது அசவுகரியம் திரையில் பிரதிபலிக்கவில்லை. ஆனால் நான் அப்படித்தான் உணர்ந்தேன்." என்று சோனாக்ஷி குறிப்பிட்டார்.
மேலும், தனக்கு ஹ்ரித்திக் ரோஷன் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததைப் பற்றியும் அவர் பேசியுள்ளார். "எனது பள்ளி காலத்தில் என் முதல் ஈர்ப்பு ஹ்ரித்திக் மீதுதான். அவரது படம் வெளியானால் நான் உற்சாகமாகிவிடுவேன். அவரது போஸ்டர்கள் மட்டும்தான் எனது அறையில் இருக்கும். அவர் வீடு எங்கள் வீட்டிலிருந்து 5 நிமிட தூரத்தில் இருந்தது. தினமும் ஒரு போஸ்டரை என் வீட்டிலிருந்து அவருக்கு அனுப்பி அதில் அவர் கையெழுத்து வாங்கிக் கொண்டு வா என வேலையாளை அனுப்புவேன். ஹ்ரித்திக் விஷயத்தில் மட்டும்தான் நான் இப்படி செய்துள்ளேன்" என சோனாக்ஷி பேசியுள்ளார்.