பாலிவுட்

பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது பெண்களுக்குக் கடினம்: வித்யா பாலன்

பிடிஐ

தங்களைப் பற்றி தவறாக தீர்மானித்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான், வேலை செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றி பெண்கள் பேசத் தயங்குகிறார்கள் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் ஹார்வீ வீன்ஸ்டின் சர்ச்சையைத் தொடர்ந்து நடிகர் கெவின் ஸ்பேஸி, டஸ்டின் ஹாஃப்மேன் உள்ளிட்டோரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலும், நடிகர்கள் இர்ஃபான் கான், ரிச்சா சத்தா உள்ளிட்டோர், நடிப்பு வாய்ப்புகளுக்காக சமரசம் செய்து கொள்ளும்படி தங்களை அணுகியவர்களைப் பற்றி கூறியுள்ளனர்.

இந்நிலையில், வித்யா பாலன் பாலியல் துன்புறுத்தல் பொழுதுபோக்குக் துறையைத் தாண்டியும் நிறைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசும் தைரியம் பெண்களுக்கு வருவதில்லை. தங்களையே குற்றம்சாட்டுவார்களோ என அவர்கள் அஞ்சுவதே அதற்குக் காரணம். அதனால்தான் பாலியல் ரீதியான பிரச்சினைகள் பற்றிப் பேசுவது பெண்களுக்குக் கடினமாக உள்ளது என நினைக்கிறேன்.

இன்று அது எல்லா துறையிலும் இருக்கிறது. பொழுதுபோக்குத் துறையில் நடந்தால் மட்டும் பேசப்படுகிறது. சினிமா துறையும் சமுதாயத்தில் ஒரு பங்கே. இங்கு அது பெரிதுபடுத்தப்படுவதுதான் ஒரே வித்தியாசம். ஏன், மேற்கிலும் பல சக்திவாய்ந்த, வெற்றிகரமான நட்சத்திரங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். வெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

எனக்கு யாருடனாவது நடிக்க அசவுகரியமாக இருந்தால் நான் உடனே அங்கிருந்து விலகிவிடுவேன். அதுதான் எனது தற்காப்பு முறையாக இருந்துள்ளது. என்னால் விலகிவிட முடியும் ஏனென்றால் எனக்கு வீடு என்ற ஒன்று இருந்தது. குடும்பம் இருந்தது. என் தட்டில் உணவு இருந்தது. நான் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் பலருக்கு இதே சூழல் இருக்காது.

நான் இதுவரை வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. அப்படி செய்து கொண்டவர்களைப் பற்றி நான் எதுவும் நினைக்கவுமில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரின் சூழலும் வேறு வேறானது. ஒரு பெண்ணாக எனக்கு ஆறாம் அறிவு, உள்ளுணர்வு எல்லாம் இருக்கிறது. நான் யாருடனாவது சென்று தேநீர் அருந்தினேன் என்றால் அது என் விருப்பம் இருந்தால் மட்டுமே. மற்ற வழிகளில் வாய்ப்புகளைப் பெறுவது என்பது எனது கண்ணியத்துக்கு கீழான செயலாக நான் நினைத்தேன்". இவ்வாறு வித்யா பாலன் பேசியுள்ளார்.

வித்யா பாலன் நடிப்பில் 'துமாரி சூலு' என்ற இந்தி திரைப்படம் நவம்பர் 17 அன்று திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT