தனது மன நலனில் கவனம் செலுத்தியதால், பாலிவுட்டில் தான் சந்தித்த தடைகளைத் தாண்டி வர முடிந்தது என நடிகை கங்கணா ரணவத் கூறியுள்ளார்.
திரைத் துறையில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுபவர் கங்கணா. துறையில் இல்லாத போதும் நடிகர் ஆதித்யா பாஞ்சோலியுடன் இருந்த உறவைப் பற்றி, அதில் தான் சந்தித்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தற்போது ரீபாக் இந்தியா (Reebok India) நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கங்கணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போராட உடலுறுதியுடன் இருப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ரீபாக் ஆரம்பித்துள்ளது. இதையொட்டி ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள கங்கணா, அதில் கூறியதாவது:
"சினிமா வம்சத்தை சேராதவள் என்பதால் துறையில் வெற்றிக்கான எனது பயணம் தானாகவே கடினமாக மாறியது. எளிமையான, பாலிவுட்டுக்கு தொடர்பில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனது கனவுகளும், ஆர்வமும் என்னை ஒரு சந்திப்புக்கு எடுத்துச் சென்றது. ஆனால் அங்கிருந்து நானேதான் எனக்கான பாதையை அமைத்துக் கொண்டேன். நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அளவிட முடியாத வகையில் கடினமாக இருந்தது.
நான் எனது மனநல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினேன். எல்லையைத் தொட வேண்டும் என்று எனக்குள் இருந்த வைராக்கியம், ஒவ்வொரு தடையையும் அற்பமானதாக்கியது. நான் அவற்றை எதிர்கொண்டேன். மெதுவாக, உறுதியாக என்னை நானே மேம்படுத்திக் கொண்டேன். வேறு யாரும், எதுவும் வெற்றியை நோக்கிய எனது பாதையை தடை செய்ய நான் விடவில்லை.
தொழில்ரீதியாக நான் சமத்துவமின்மையை தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். இந்த வழியில் போராடி சக ஆண் நடிகர்களுக்கு இணையாக நான் இன்று நின்று கொண்டிருக்கிறேன். அதனால் ரீபாக்கின் இந்த பிரச்சாரத்தோடு என்னால் அதிகமாக அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது. "
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.