மும்பை: மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக நடித்தவர் தெலுங்கு நடிகை ஷோபிதா துலிபாலா. இந்தி, மலையாளப் படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘நைட் மானேஜர்’ வெப் தொடரின் 2 வது சீசனில் நடித்துள்ளார். இதன் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், சினிமாவில் தனது ஆரம்பக்கட்ட போராட்டம் பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “ஒரு கேரியரை தொடங்கும்போது எல்லாமே போராட்டம்தான். நான் சினிமா பின்னணியில் இருந்து வரவில்லை. முதலில் விளம்பரங்களில் நடித்தபோது, என் நிறம் பற்றி குறை சொன்னார்கள். நான் அழகாக இல்லை என்று பலமுறை முகத்துக்கு நேராகச் சொன்னார்கள். அதைப் பற்றி வருந்துவதற்குப் பதிலாக திறமையை வெளிப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினேன். அழகைப் பற்றிய அவர்கள் பார்வைக் குறுகியது என்று பின்னர் உணர்ந்தேன். ஆடிஷனுக்குச் சென்று சிறந்ததை வழங்குவதே எனது முடிவு. சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. பிறகுதான் வாய்ப்புகள் வந்தன” என்றார்.