சமூகப் போராளியாக இருந்து டெல்லி முதல்வராக மாறிய அர்விந்த் கேஜ்ரிவால் பற்றிய ஆவணப்படம் நவம்பர் 17-ல் இந்தியாவில் வெளியாகிறது.
இப்படம் 'ஏன் இன்சிக்னிஃபிகண்ட் மேன்' என்ற பெயரில் வெளிவர உள்ளது. இதனை குஷ்பூ ரங்கா மற்றும் வினய் சுக்லா ஆகியோட் இயக்கியுள்ளனர்.
அமெரிக்க மீடியா நிறுவனமான வைஸ் இதனை வெளியிடுகிறது.
முன்னதாக தணிக்கை வாரியத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டால் படத்துக்கு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று மத்திய தணிக்கை வாரிய முன்னாள் தலைவர் நிஹாலானி கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மறுப்பு இன்மைச் சான்றிதழும் பெறப்பட்டு, 2016-ல் டொரண்டோ திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நவம்பர் 17-ல் இந்தியாவில் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.