பாலிவுட்

Man vs Wild | விராட் கோலி, பிரியங்கா சோப்ராவுக்கு பியர் கிரில்ஸ் அழைப்பு

செய்திப்பிரிவு

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘மேன் vs வைல்ட்’ (Man vs Wild) நிகழ்ச்சியில் பங்கேற்க விராட் கோலி மற்றும் பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சி தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆள் ஆரவமற்ற காட்டில் தனித்து விடப்பட்ட ஒருவர் எப்படியெல்லாம் உயிர் பிழைக்க முடியும் என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட தொடர் ‘மேன் vs வைல்ட்’. கடந்த 2006 காலக்கட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரை வழிநடத்தும் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் முன்னாள் ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான இந்தத் தொடரில் இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, திரைப் பிரபலங்களான ரஜினிகாந்த், ரன்வீர் சிங், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இப்போது எங்களால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது.

பிரியங்கா சோப்ராவும், விராட் கோலியும் உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் நபர்கள். மேலும், இளைஞர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்களின் இந்த சாதனை பயணத்தையும், வாழ்க்கையையும் அறிந்துகொள்வது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உற்சாகமளிக்கும் விஷயமாக இருக்கும்” என்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கடைசியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்துகொண்டிருந்தத்து குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT