பர்ஹான் அக்தர் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் இந்தியில் 'ஜிகர்தண்டா' ரீமேக் உருவாகவுள்ளது. இப்படத்தை அஜய் தேவ்கான் தயாரிக்கவுள்ளார்.
தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஜிகர்தண்டா'. 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார். இப்படத்தின் கன்னட ரீமேக்கை சுதீப் தயாரித்திருந்தார்.
தற்போது இதன் இந்தி ரீமேக் முடிவாகியுள்ளது. அஜய் தேவ்கான் தயாரிக்கவுள்ள இப்படத்தை நிஸாந்த் கமத் இயக்கவுள்ளார். சித்தார்த் வேடத்தில் பர்ஹான் அக்தரும், பாபி சிம்ஹா வேடத்தில் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது இதர படக்குழுவினரை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது படக்குழு.