“சக்திமான் தொடர் ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும். இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது” என அந்தத் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சக்திமான் தொடர் படமாக உருவாக உள்ளதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ரூ.200-300 கோடி பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. கரோனாவால் படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மற்றொன்றையும் நான் இங்கே சொல்லியாகவேண்டும். படத்தின் நான் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.
படக்குழுவினர் எந்த ஒப்பீடும் வேண்டாம் என்றதால் சிறப்புத் தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படும். மேலும், படத்தின் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுடப குழுவின் பெயர்களும் விரைவில் வெளியாகும். படம் வேறொரு தரத்தில் இருக்கும்” என்றார்.
கடந்த 1997-ம் ஆண்டு தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பானது ‘சக்திமான்’. சிறுவர்களிடையே மிகவும் பிரபலமடைந்த இந்தத் தொடர் கிட்டத்தட்ட 2005-ம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டடது. இதில் சக்திமானாக முகேஷ் கண்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.