சென்னை: நெல்களை திறந்தவெளியில் வைத்திருக்கும் நிலைவராது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் தொடர்பாக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சரின் முயற்சியால், இந்தாண்டு நெல் கொள்முதல் செப்டம்பர் 1ம் தேதி முதலே தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை 2,52,636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு மூட்டை நெல்லைக் கூட திறந்தவெளியில் வைத்து நனைய விடக்கூடாது என்ற நோக்கத்தில் கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வருகிறோம். அதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் 1,04,000 டன் நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. திறந்தவெளியில் மீதமுள்ள நெல் இன்னும் ஒரு மாதத்திற்குள் அரவைக்கும், பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளுக்கும் அனுப்பப்படும்
மேலும், முதல்வர் இந்த ஆண்டு 20 திறந்தவெளிக் கிடங்குகளுக்கு மேற்கூரையும் தரைத் தளமும் அமைக்க 238 கோடி ரூபாய் ஒதுக்கி அனுமதித்துள்ளார்கள். இவற்றின் கொள்ளளவு 2,86,350 டன்கள். இதனுடன் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த 138 கிடங்குகள் உள்ளன. இவற்றின் கொள்ளளவு 7,94,450 டன்கள் ஆகும். எனவே, இனி நெல் மணிகளை திறந்தவெளியில் வைத்திருக்கும் நிலை எழாது" இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்து.