சினிமா

சினிமா நியூஸ் 3 - மீண்டும் ஷெரின், கங்கனா நிகழ்ச்சிக்கு தடை, ஸ்ருதிஹாசனுக்கு கரோனா

செய்திப்பிரிவு

மீண்டும் ஷெரின்: கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து ‘விசில்’, ‘உற்சாகம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவருக்கு, பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பரபரப்பாக பேசப்பட்டாலும் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், தற்போது ‘ரஜினி’ என்ற படத்தில் நாயகியாக ஷெரின் நடித்துள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஜய் சத்யா நடிக்கிறார். வி.பழனிவேல் தயாரித்துள்ளார்.

ஸ்ருதிஹாசனுக்கு கரோனா: இந்தியாவில் கரோனா 3-வது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். ‘‘நான் மிகவும் பாதுகாப்பாக இருந்தும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். குணமடைந்து வருகிறேன். விரைவில் உங்களை சந்திப்பேன்'’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கங்கனா நிகழ்ச்சிக்கு தடை: நடிகை கங்கனா ரனாவத்தின் ’லாக்கப்’ நிகழ்ச்சிக்கு ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை முதல் எம்.எக்ஸ். பிளேயரில் ஒளிபரப்பாக இருந்த நிலையில், ‘த ஜெயில்’ கான்செப்ட் தங்களுக்கானது என்றும், அதை அப்படியே தழுவி, ‘லாக்கப்’ என்ற நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர் என்றும் ஹைதராபாத்தை சேர்ந்த பிரைட் மீடியா என்ற நிறுவனம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

SCROLL FOR NEXT