வயதான கதாபாத்திரங்களில் நடிக்கத் தயக்கமில்லை என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.
விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் 'என்றாவது ஒரு நாள்' திரைப்படம் வரும் அக்டோபர் 3ஆம் தேதி நேரடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ப்ரீமியராக ஒளிபரப்பாகவுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று இந்தப் படம் பல விருதுகளை வென்றுள்ளது.
இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ரம்யா நம்பீசன் கூறுகையில், "எனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. நாம் அதிகமாகத் திட்டமிடும் அளவுக்கு நம் வாழ்க்கை நீண்டதல்ல. 'ப்ளான் பண்ணி பண்ணனும்' படத்துக்காக நிறைய திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்தப் படம் கடந்த வாரம் வெளியாகாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிறைய விஷயங்களைத் திட்டமிட்டு இந்தத் தொற்றுக் காலத்தால் அவற்றைச் செய்ய முடியாமல் போய்விட்டது.
கதாபாத்திரமும் கதையும் எனக்குப் பிடித்திருந்தால் நான் அந்தப் படத்தில் நடிப்பேன். நான் நடித்த 'சேதுபதி', 'என்றாவது ஒரு நாள்', அதன்பின் பிரபுதேவாவுடன் ஒரு படம் என எல்லாவற்றிலும் வயதான கதாபாத்திரங்கள்தான் என்றாலும் எனக்கு அதில் தயக்கமில்லை. 'என்றாவது ஒரு நாள்' ஒரு முறையான கிராமத்துத் திரைப்படம். மிகவும் உணர்வுபூர்வமான படம். என் உடல் மொழி, தமிழ் பேசும் விதம் என எல்லாமே கடினமாக இருந்தது. ஆனால், சமாளித்திருக்கிறேன்
குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து தற்போது 21 வருடங்கள் திரைத்துறையில் முடித்திருக்கிறேன். இவ்வளவு நாட்கள் தாக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி" என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.