சினிமா

டி- சீரிஸ் பூஷன் குமார் மீது பாலியல் வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

டி- சீரிஸ் பூஷன் குமார் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக பெண் ஒருவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

90களில் ஆடியோ கேசட் நிறுவனமாக தொடங்கப்பட்டு தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக கொடிகட்டிப் பறப்பது டி- சீரிஸ் நிறுவனம். இதன் நிறுவனரான குல்ஷன் குமாரின் மறைவுக்குப் பிறகு இந்நிறுவனத்தை நடத்தி வருபவர் அவரது மகன் பூஷன் குமார். ‘ஆஷிக்கி’ படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பை தொடங்கிய டி- சீரிஸ் இதுவரை ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.

இந்நிலையில் டி- சீரிஸ் பூஷன் குமார் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அவர் மீது புகாரளித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு விடுதியில் முதன்முறையாக பூஷன் குமாரை தான் சந்தித்ததாகவும், அவரிடம் திரைத் துறையில் தனக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறு பூஷன் குமாரிடம் கேட்டதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.

அப்போது பூஷன் குமார் தனது செல்போன் எண்ணை அந்த பெண்ணிடம் கொடுத்து தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியதாகவும், அதனடிப்படையில் அவர் மறுநாள் வாட்ஸப்பில் பூஷன் குமாரை தொடர்பு கொண்டதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் பூஷன் குமார் அந்த பெண்ணின் புகைப்படங்களை கேட்டதாகவும் தெரிகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூஷன் குமார் அந்த பெண்ணை தனது காரில் தனது பங்களாவுக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை வீடியோ எடுத்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெளியே சொன்னால் வீடியோவை வெளியே விட்டுவிடுவேன் என்று பூஷன் குமார் தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பூஷன் குமார் மீது மும்பை போலீஸார் இந்திய தண்டனை சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை), 420 (ஏமாற்றுதல்), 506 (குற்றம் கருதி மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு டி-சீரிஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT