தெலுங்குத் திரையுலகத்தினரிடையே பிரபலமான மக்கள் தொடர்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பி.ஏ.ராஜு காலமானார். அவருக்கு வயது 62. இந்தச் செய்தியை ராஜுவின் மகன் சிவகுமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
"எங்கள் அன்பார்ந்த தந்தை ஸ்ரீ பி.ஏ.ராஜுவின் திடீர் மறைவை மிகுந்த துயரத்துடன், சோகத்துடன் பகிர்கிறோம். சர்க்கரை அளவில் திடீர் மாற்றங்களாலும், மாரடைப்பாலும் அவர் உயிர் பிரிந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அப்பா, என்றுமே ராஜாவாக இருங்கள்" என்று சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஹிட் என்கிற தெலுங்குத் திரைத்துறை சார்ந்த பத்திரிகையோடு தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர ராஜு. மூத்த நடிகர் கிருஷ்ணாவுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 1500 தெலுங்குப் படங்களுக்கும் மேலாக மக்கள் தொடர்பு பொறுப்பைக் கவனித்துள்ளார். 'ப்ரேமிகுலு', 'சண்டிகாடு' உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார். இவரது மனைவி ஜெயா 4 வருடங்களுக்கு முன் காலமானார். ஜெயா - ராஜு தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ராஜுவின் மறைவுக்குத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'எங்கள் குடும்பத்துக்கும், திரைத்துறைக்கும் மிகப்பெரியு இழப்பு இது' என்று நடிகர் மகேஷ் பாபு ட்வீட் செய்துள்ளார்.
ராஜுவின் திடீர் மறைவு தனக்கு அதிர்ச்சியைத் தந்திருப்பதாகப் பகிர்ந்திருக்கும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், திரையுலகில் தனது ஆரம்பக் காலத்திலிருந்து அவரைத் தெரியும் என்றும், திரைத்துறைக்கு அவர் பெரிய அளவில் பங்காற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் ராஜுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராஜுவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மே 22, சனிக்கிழமை அன்று தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த வேறெந்த செய்தியும், தகவலும் பகிரப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.