சினிமா

அமிதாப் பச்சனுடன் பணியாற்ற முடியாததில் வருத்தமே: இயக்குநர் பிரியதர்ஷன்

செய்திப்பிரிவு

தனது 40 வருடத் திரை வாழ்க்கையில் கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருடன் பணியாற்ற முடியாமல் போனது மட்டும்தான் வருத்தம் அளிக்கிறது என இயக்குநர் பிரியதர்ஷன் கூறியுள்ளார்.

"எம்டி வாசுதேவன் நாயர், அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து என்னால் படம் எடுக்க முடியவில்லை. பல முறை நாங்கள் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு பக்கத்தில் வந்து தவறிப் போயிருக்கிறது. பல காரணங்களால் நடக்கவில்லை.

2016ஆம் ஆண்டு என் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றி பெற்ற 'ஒப்பம்' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. என்னால் அமிதாப்பை மட்டும்தான் நாயகனாக நினைக்க முடிகிறது. ஆனால், இதேபோன்ற கதாபாத்திரத்தில் அவர் ஏற்கெனவே நடித்திருக்கிறார். நாங்கள் இருவரும் இணையும் கச்சிதமான அந்தக் கதையை நான் இன்னும் தேடி வருகிறேன்.

40 வருட திரைத்துறை அனுபவத்துக்குப்பின் சில நேரங்களில் ஓய்வு பெற்றுவிடலாமா என்று நான் யோசிப்பேன். பின் 76 வயதில் அமிதாப் பச்சன் தொடர்ந்து தினமும் 18 மணி நேரங்கள் பணிபுரிவதைப் பார்ப்பேன். உடனே என் பேட்டரிகளுக்கு சக்தி வந்துவிடும்" என்று பிரியதர்ஷன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT