சினிமா

சுஷாந்த், திஷா தற்கொலை சர்ச்சை: இன்ஸ்டாகிராமிலிருந்து விலகிய பாலிவுட் நடிகர்

செய்திப்பிரிவு

நடிகர் சூரஜ் பன்ச்சோலி இன்ஸ்டாகிராமிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் அவரது மேலாளர் திஷா சலியான் ஆகிய இருவரின் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் நடிகர் சூரஜ் பன்ச்சோலியைக் குற்றம்சாட்டி பலர் பேசி வருகின்றனர். சூரஜ்ஜும், அவரது குடும்பத்தினரும் இது குறித்த மறுப்பு தெரிவித்து, தங்கள் மீதான அவதூறுக்கு எதிராக காவல்துறையில் புகாரும் அளித்துள்ளனர்.

சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட சில நாட்களுக்கு முன் தான் அவரது மேலாளர் திஷா தற்கொலை செய்து கொண்டார். சூரஜ் பன்ச்சோலியும் திஷாவும் காதலர்கள் என்றும், திஷா இந்த முடிவை எடுக்க சூரஜ் காரணமென்றும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ஆனால் சூரஜ் மற்றும் குடும்பத்தினர் அனைவருமே திஷாவை தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், "சென்று வருகிறேன் இன்ஸ்டாகிராம். இந்த உலகம் மேம்பட்ட இடமாக மாறும்போது ஒரு நாள் உன்னைச் சந்திப்பேன் என நம்புகிறேன். நான் சுவாசிக்க வேண்டும். நெரிக்கப்படுவதாக உணர்கிறேன்" என்று சூரஜ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கியுள்ளார்.

முன்னதாக 2013-ஆம் ஆண்டு, நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது சூரஜ் பன்ச்சோலி தான் என ஜியாவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT