சினிமா

ஐசியூவில் தொடர் சிகிச்சையில் எஸ்பிபி: மருத்துவமனை தகவல்

செய்திப்பிரிவு

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ஐசியூவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்பிபிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 24) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கோவிட்-19 தொற்றுப் பிரச்சினை காரணமாக எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவருடைய உடல்நிலை சீராகவுள்ளது. அவரை எங்களுடைய மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது".

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT