மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அதற்குப் பிறகு 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும், நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராகவும், திரையுலகினர் பலருக்குத் தோல் மருத்துவராகவும் இருந்தார்.
கடந்த மார்ச் 26-ம் தேதி சென்னையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மறைவு திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மனைவியின் பெயர் உமையாள். இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
சேதுராமன் மறைவின்போது உமையாள் 2-வது முறையாக கர்ப்பமாக இருந்தார். நேற்று (ஆகஸ்ட் 3) உமையாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சேதுராமனின் மனைவிக்குக் குழந்தை பிறந்திருப்பதற்கு, அவரது நண்பர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். மறைந்த சேதுராமனே அவருக்குக் குழந்தையாக வந்து பிறந்திருப்பதாகக் குறிப்பிட்டு 'குட்டி சேது' எனக் குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.