சினிமா

சர்வதேச அளவில் உதவிக் கரம் நீட்டும் சோனு சூட்

செய்திப்பிரிவு

புலம்பெயர்ந்து வந்து சிக்கியிருப்பவர்கள் வீடு திரும்ப உதவிகள் செய்து கொண்டிருக்கும் நடிகர் சோனு சூட் தற்போது சர்வதேச அளவில் தனது உதவிக்கரங்களை நீட்டியுள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். ஒரு தரப்பு மக்கள் பல்லாயிரம் கிலோ மீட்டர் நடந்தே சொந்த ஊர் திரும்பிய அவலமும் நடந்தேறியது.

அந்தச் சமயத்தில் பல திரை நட்சத்திரங்கள் முன்வந்து, அப்படி சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை இலவசமாக ஏற்பாடு செய்து தந்தனர். அதில் முக்கியமானவர் நடிகர் சோனு சூட். மும்பை மாநிலத்திலிருந்து பல தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார். ஜூலை 22-ம் தேதி ஒரு தனி விமானம் மூலம் அந்த மாணவர்கள் இந்தியா திரும்புகின்றனர்.

"இது வீட்டுக்குத் திரும்புவதற்கான நேரம் என்று கிர்கிஸ்தானில் இருக்கும் (இந்திய) மாணவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். பிஷ்கெக்-வாரணாசி இடையே முதல் தனி விமானம் 22 ஜூலை அன்று புறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கும், மொபைல் எண்ணுக்கும் இன்னும் சற்று நேரத்தில் அனுப்பப்படும். மற்ற மாநிலங்களுக்கான தனி விமானச் சேவைகளும் இந்த வாரம் பறக்கும்" என்று சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

3000 இந்திய மாணவர்கள் தற்போது கிர்கிஸ்தான் நாட்டில் உள்ளனர். இதில் 20 பேர் ஜார்க்கண்ட்-பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரமே இதுகுறித்து உறுதி செய்திருந்தார் நடிகர் சோனு சூட்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள சதாம் கான் என்ற மாணவர், "கிர்கிஸ்தான் ஆசிய மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் 300 மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கும் சோனு சூட், குணால் சாரங்கி மற்றும் ரேகா மிஷ்ரா ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்.

கோவிட்-19 தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒன்று கிர்கிஸ்தான். எங்களை மீட்டு இந்த நாட்டை விட்டு வெளியேற்றும் வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய விமானப் பயணக் கட்டணத்தை நாங்கள் தர வேண்டாம் என்று சோனு சூட் எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் செய்த உதவிகள் குறித்தும், அந்த அனுபவம் பற்றியும் புத்தகம் ஒன்றை எழுதவுள்ளதாக சோனு சூட் கூறியது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT