தமிழ் சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் சாதித்தவர்களின் பட்டியல் பெரிது. இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பவர்கள், அப்படி இயங்கியும் தொடர்ந்து அனைத்துத் துறைகளில் வெற்றிகளைக் குவிப்பவர்கள் மிக அரிதானவர்கள். அத்தகு அரிதானவர்களில் ஒருவரும் உழைப்பும் திறமையும் இருந்தால் சாதிக்கலாம் என்று இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கக்கூடியவருமான அருண்ராஜா காமராஜுக்கு இன்று (ஜூன் 15) பிறந்த நாள் .
எளிய பின்னணியைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் அருண்ராஜா. அரசுப் பள்ளியில் படித்தவர். திருச்சி ஜேஜே இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தபோது சிவகார்த்திகேயனும் அங்குப் படித்துக்கொண்டிருந்தார். அன்று தொடங்கிய நட்பு இன்று இருவரும் திரைத் துறை சாதனையாளர்களாகிவிட்ட பிறகும் நீடிக்கிறது. கல்லூரி நாட்களில் முன்னணி கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தார் அருண்ராஜா.
வெற்றிகரமான பாடலாசிரியர்
2012-ல் வெளியான 'பீட்சா' படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அதை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படமான 'ஜிகர்தண்டா' படத்தில் பாடகராகவும் இயக்குநர் அட்லியின் அறிமுகப்படமான 'ராஜா ராணி' படத்தில் நடிகராகவும் அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ். 'ஜிகர்தண்டா' படத்தில் 'டிங் டாங்' என்ற பாடலை எழுதிப் பாடினார்.
'காக்கி சட்டை', 'டிமாண்டி காலனி', 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா', 'தெறி', 'கபாலி', 'கொடி', 'பைரவா', 'காலா', சர்வம் தாளமயம்', 'அசுரன்', 'மாஸ்டர்' என பல முக்கியமான திரைப்படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றியுள்ளார் அருண்ராஜா.
நெருப்பாய்ப் பரவிய 'நெருப்புடா'
இவற்றில் பா.இரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்துக்கு அவர் எழுதிப் பாடிய 'நெருப்புடா' பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு ஒரு பாடலாசிரியராக அவருடைய புகழை உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களுக்கும் பரவச் செய்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்துக்கு அவர் எழுதிய 'குட்டி ஸ்டோரி' பாடல் பட்டி தொட்டியெங்கும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. விஜய் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து யூடியூப் வியூஸ் எண்ணிக்கையில் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது.
உணர்வைக் கடத்தும் பாடகர்
ஒரு பாடகராக பெரும்பாலும் தீம் பாடல்கள் அல்லது காட்சியின் உணர்வை பன்மடங்காக உதவும் பாடல்களையே அதிகமாகப் பாடியிருக்கிறார் அருண்ராஜா. 'அசுரன்' படத்தில் 'வா எழுந்துவா' பாடலில் அவர் குரல் பாடலின் சுழலுக்கேற்ற உணர்வை ரசிகர்களுக்குச் சிறப்பாகவும் கச்சிதமாகவும் கடத்தும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். அதேபோல் 'பைரவா' படத்தில் விஜய்க்கான 'வர்லாம் வர்லாம் வா பைரவா' தீம் பாடலிலும் அவருடைய குரலில் கொப்பளிக்கும் உணர்வுகள் விஜய் ரசிகர்களுக்கு ராஜபோதை ஊட்டின.
'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரெமோ', 'மரகத நாணயம்', 'நட்புன்னா என்னானு தெரியுமா' ஆகிய படங்களின் மூலம் ஒரு நல்ல நகைச்சுவை நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அருண்ராஜா.
மகளிர் கிரிக்கெட்டின் முதல் பதிவு
2018-ல் வெளியான 'கனா' திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராகவும் தடம் பதித்த அருண்ராஜா முதல் படத்தையே அனைத்துத் தரப்பு ரசிகர்களும் விரும்பிப் பார்த்த வெற்றிப் படமாகவும் கொடுத்துவிட்டார். மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இது. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தரும் அணியில் இடம் பிடித்த பெண்ணின் கதையாக இதை அமைத்திருந்தார். விவசாயிகள் கடன் பிரச்சினையையும் இதே படத்தில் உணர்வுபூர்வமாகப் பேசியிருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், முக்கிய கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் மிகச் சிறந்த நடிப்பை வாங்கியிருந்தார். முதல் படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார் அருண்ராஜா காமராஜ்.
பாடலாசிரியர், பாடகர், நடிகர், இயக்குநர் என முதல் சில ஆண்டுகளிலேயே பல துறைகளில் தனிமுத்திரை பதித்திருக்கும் அருண்ராஜா காமராஜ் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி மென்மேலும் புகழடைய வேண்டும் என்று அவருடைய பிறந்த நாளான இன்று மனதார வாழ்த்துவோம்.