’கன்னிப்பருவத்திலே’யில் சேரவேண்டிய விஜயகாந்த் - பாக்யராஜ் இருவரும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சொக்கத்தங்கம்’ படத்தின் மூலமாக இணைந்து வெற்றிப் படத்தைக் கொடுத்தார்கள்.
எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினிக்குப் பிறகு தலைப்புக்கும் நாயகனுக்குமாகப் பொருந்தக் கூடியதாக தலைப்பு விஜயகாந்த் படங்களுக்கு அதிக அளவில் வைக்கப்பட்டது. அதிலொன்று ‘சொக்கத்தங்கம்’ . நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த படம்.
விஜயகாந்தின் 141வது படமாக வந்து, தனிப்பெரும் வெற்றியைப் பெற்றது ’சொக்கத்தங்கம்’ . விஜயகாந், பிரகாஷ்ராஜ், செளந்தர்யா என பலருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
2003ம் ஆண்டு பொங்கலுக்கு வந்தது ‘சொக்கத்தங்கம்’. அதேநாளில், தரணி - விக்ரம் இணைந்த ‘தூள்’ வெளியானது. விஜய்யின் ‘வசீகரா’ வெளியானது. கமல் - சுந்தர் சி இணைந்த ‘அன்பே சிவம்’ வெளியானது. கூடவே, ‘அன்னை காளிகாம்பாள்’, ’காலாட்படை’, ‘ராமச்சந்திரா’ உள்ளிட்ட படங்களும் வந்தன. இதில், விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
கிராமத்துப் படம் பண்ணுவது பாக்யராஜுக்குப் புதிதில்லை. அதேபோல், விஜயகாந்துக்கும் கிராமத்துப் படங்கள் பல மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. எண்ணெய்ச் செக்கு ஆலை வைத்திருப்பவராகவும் தங்கை மீது உயிரையே வைத்திருப்பவராகவும் அசத்தியிருப்பார் விஜயகாந்த். அதேசமயத்தில், தன்னை நம்பி வந்த பெண்ணான சவுந்தர்யாவைக் காப்பவராகவும் காதலிப்பவராகவும் பிரமாதப்படுத்தியிருப்பார்.
தங்கையாக உமா, அருமையான நடிப்பையும் நாயகியாக செளந்தர்யா ஆகச்சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார்கள். முக்கியமாக, பிரகாஷ்ராஜின் நடிப்பும் பேசப்பட்டது. அதேபோல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கவுண்டமணி - செந்தில் ஜோடி போட்டு, காமெடி ரவுசு பண்ணினார்கள்.
பாக்யராஜ், கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ‘கன்னிப்பருவத்திலே’ திரைப்படம் நினைவிருக்கிறதுதானே. தி.நகர் ரோஹிணி லாட்ஜில் விஜயகாந்தும் பாக்யராஜும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது விஜயகாந்த் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பி.வி.பாலகுரு இயக்கிய ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் ராஜேஷ் நடித்த கேரக்டருக்கு விஜயகாந்தை சிபாரிசு செய்தார் பாக்யராஜ். அதன்படி, விஜயகாந்தையும் வடிவுக்கரசியையும் வைத்து போட்டோ ஷூட்டெல்லாம் எடுக்கப்பட்டது. ஆனால் ராஜேஷ் நடிக்கும்படியானது.
79ம் ஆண்டு வெளியானது ‘கன்னிப்பருவத்திலே’. அன்றைக்கு சேர்ந்திருக்க வேண்டிய பாக்யராஜ் - விஜயகாந்த் ஜோடி, 24 வருடங்களுக்குப் பிறகு இணைந்தது. ஹிட் கொடுத்தது. விஜயகாந்தின் தனிப்பட்ட குணத்தைச் சொல்லும் விதமாக, ‘சொக்கத்தங்கம்’ என்று வைத்த டைட்டில், அவரின் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. பி அண்ட் சி செண்டரில், மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் கொடுத்தது.
தேவா, சபேஷ் முரளியின் இசையில் பாடல்களும் ஹிட்டாகின. ’என்ன நினைச்சே’, ‘என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு’ என்ற பாடல்கள் அப்படியொரு மெலடி தாலாட்டு. பிரபல தயாரிப்பாளரும் மணிரத்னத்தின் சகோதரருமான ஜி.வி. படத்தை தயாரித்திருந்தார். தமிழகத்தின் பல இடங்களிலும் 125 நாட்களுக்கு மேல் ஓடியது.
விஜயகாந்தின் வெற்றிப் பட வரிசையில், ‘சொக்கத்தங்கம்’ படத்துக்கு தனியிடம் உண்டு. பாக்யராஜ் நடிக்காமல் இயக்கிய இந்தப் படம், அவருக்கும் மறக்க முடியாத படமாக அமைந்தது.