டிசம்பர் 15 | ரஷ்ய கலாச்சார மையம் | மதியம் 3:00 மணி
17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரையிடப்படுவதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய ஆரம்பமே இந்த மாதிரி சர்வதேச திரைப்பட விழாக்கள் தான். அப்போது நான் யாரென்று யாருக்கும் தெரியாது. கொஞ்சம் எனக்கே தெரியாது.
ஆனால், மனதுக்குள் இது தான் என் களம். இங்குதான் ஜெயிக்கப் போறேன் என்று சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் சென்று அங்குப் படங்கள் பார்த்து, இந்த மாதிரி படங்கள் ஏன் நம்ம பண்ணக்கூடாது என நினைத்தேன். சினிமா என்பது ஒரு கமர்ஷியல், வர்த்தகம் நிறைந்தது, லாபம் உயரியது என்று இருக்கிற நேரத்தில் ஆத்ம சுகத்துக்காக செய்யுற தொழில். அப்படி சொல்ல முடியாது. சினிமாவுக்குள் இருப்பது ஒரு பெரிய மகிழ்ச்சியா, சிறப்பா, தலைக்கு மேல் ஒரு கவசமா, கிரீடமா சுமக்கணும் என்பது மனதுக்குள் நினைத்தால் மட்டுமே நல்ல படங்களை எடுக்கணும் என முயற்சி செய்ய முடியும்.
அப்படிப்பட்ட மிகச்சிறியக் கூட்டத்துக்குள் நானும் ஒருவன். பல வருடங்களாக இதுக்குள் உழண்டு வந்துகொண்டே தான் இருக்கேன். எனது முதல் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்று, தேசிய விருது கிடைத்தது மிகப்பெரிய அங்கீகாரம். 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் 'ஹவுஸ்ஃபுல்' படத்துக்குக் கிடைத்தது. 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்கு இதே சர்வதேச திரைப்பட விழாவில் 'Special Jury' விருது கிடைத்தது. 3-வது இடம் கொடுத்தார்கள். அந்த வருடத்தில் எது சிறந்த படமாகக் கொடுத்தார்கள் என ஞாபகமில்லை. கொஞ்சம் மனவருத்தத்துடன் தான் வாங்கினேன்.
அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு தான் இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களுடைய மறைவு. நான் என்ன பரிசு வாங்கினாலும், முதலில் பாராட்டுபவர் கே.பி சார். அவருடைய வாழ்த்துகள் எனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துடன், அந்த மேடையிலேயே அழுதுவிட்டு ஓடிவந்தேன். அதற்குப் பிறகு நான் எந்தப் படம் பண்ணினாலும், ஏன் விருது கிடைக்கவில்லை என வருத்தப்பட்டதில்லை.
'ஒத்த செருப்பு' படம் கோல்டன் குளோப் விருது பட்டியலில் 15 படங்கள் வரிசைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இருப்பதே பெரிய பெருமை. இந்தப் படத்துக்கு மிக உயரிய விருதுகள், ஆஸ்கர் விருது உட்பட கிடைக்கணும் என்று வாழ்த்தாத உள்ளங்களே இல்லை. குறிப்பாக தங்கராஜ், ராமகிருஷ்ணன் இருவருக்கும் இந்தப் படத்தை முதலிலேயே காட்டினேன். படம் பார்த்துவிட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்கள். சமூக வலைதளத்தில் இந்தப் படத்துக்கு உச்சபட்ச வரவேற்பு இருப்பதில் மகிழ்ச்சி.
இந்தப் படம் எடுக்கலாமா, வீடு கட்டலாமா அப்படினு யோசித்துப் பார்க்கும் போது என்னுடைய குழந்தைகள் உட்பட இந்தமாதிரி ஒரு படம் எடுங்கள் என்று சொன்னார்கள். இந்தப் படத்தினால் என்ன லாபம் வரும் எதையுமே அவர்கள் சிந்திக்கவில்லை. இந்தப் படத்தின் தரத்துக்காக மிகப்பெரிய செலவு பண்ணி, அந்தப் பணம் திரும்ப வந்ததா என்று இந்த நிமிடம் வரைக்கும் கணக்குப் பார்க்காமல் இருக்கிறேன். திரையரங்குகள் கிடைக்காமல் போராடிப் போராடி இந்தப் படத்தை வெளியிட்டேன். இந்தப் படத்தை வெளியிட்டதே ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டிய தகுதி செப்டம்பர் 20-ம் தேதி என்று இருந்ததால் மட்டுமே.
'காப்பான்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'அசுரன்' போன்ற பெரிய படங்களுக்கு நடுவே 'ஒத்த செருப்பு' சிக்கித் திணறும் எனத் தெரியும். விருதை நோக்கி மட்டுமே என் பயணம் இருந்தது. அதற்காக நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நெஞ்சமில்லை. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றால் விருது. ஏனென்றால் இதுவொரு முதல் முயற்சி. முதல் முயற்சிக்கு முதல் தரமான விருதுகள் கிடைக்கவேண்டும். முதல் என்ற அடையாளம் அவசியமான ஒரு விஷயம்.
இந்தப் பட்டியலில் கலந்து கொண்டுள்ள அனைத்து தமிழ்ப் படங்களுமே சிறந்த படங்கள் தான். வெளிநாட்டுப் படங்கள் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், 'ஒத்த செருப்பு' மட்டுமே முதல் முயற்சி. விருது மட்டுமே முதல் நோக்கம். சிறந்தது என்பது மட்டுமே இதன் அடையாளம். சென்னை சர்வதேச திரைப்பட விழா சிறப்பான முறையிலே நடைபெறும். இத்தனை வருடங்களாக அப்படித்தான், இனிமேலும் அப்படித்தான். இந்தப் படத்துக்குரிய முதல் தகுதியை இந்தப் படம் அடையும் என்கிற நம்பிக்கையுள்ளது.
முதல் நாள் விழாவில் என் குருநாதர் பாக்யராஜ் அவர்கள், 'ஒத்த செருப்பு' படத்தைப் பற்றிச் சொன்னதும், நான் எழுந்து நின்று அதை வரவேற்கும் போது கிடைத்த அபரிவிதமான வரவேற்பு. அதைப் பார்த்துவிட்டு, அன்றிரவு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இயக்குநர்கள் 'யார் நீங்கள்' எனக் கேட்டார்கள். அந்தளவுக்கான மிகப்பெரிய விருதை சினிமா ரசிகர்கள், கலையைப் படிப்பவர்கள் எனச் சேர்ந்து கொடுத்தார்கள். அதுவே மிகப்பெரிய விருது
நன்றி
உங்கள்
ரா.பார்த்திபன்