சினிமா

ஹோலி பூம்: புலம்பெயர்ந்தோரின் போராட்ட வாழ்வு

எஸ்.கோபாலகிருஷ்ணன்

17ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நாளான இன்று அண்ணா திரையரங்கில் மதியம் 2:30க்கு திரையிடப்பட்ட கிரேக்கப் படம் ‘ஹோலி பூம்’ (Holy Boom). கிரேக்கத்தைச் சேர்ந்த மரியா லாஃபி (Maria Lafi) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். எலெனா டிமிட்ரிகபோலோ என்பவர் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மறுநாள் தொடங்கும் விழாவில் ‘ஹோலி பூம்’ ஒரு திட்டமிடப்படாத சுவாரஸ்யமாக அமைந்துவிட்டது. ஏனென்றால் இந்தப் படம் அண்டை நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து கிரேக்கத்தில் வசிக்கும் குடியேறிகள் பற்றிய கதை. ரத்த சொந்தங்களை மட்டுமல்லாமல் மொழி,கலாச்சார அடையாளங்களையும் தொலைத்துவிட்டு புலம்பெயர்ந்த நாட்டில் நிலையான நிம்மதியான வாழ்க்கை கிடைக்காமல் தவிப்பவர்களின் அன்றாடப் போராட்டம்தான் இந்தப் படத்தின் மையக்கரு.

பிலிப்பைன்ஸிலிருந்து குடிபெயர்ந்து ஒரு உணவகத்தில் பணியாற்றும் தம்பதியரின் பதின்பருவ மகன் ஐஜ். நண்பர்களுடன் விட்டேற்றியாக சுற்றித் திரியும் அவன் சாகசத்துக்காக தபால் பெட்டிகளை வெடி வைத்துத் தகர்க்கிறான். இதனால் அல்பேனியாவிலிருந்து குடிபெயர்ந்த ஆடியா தனது பிறப்புச் சான்றிதழை இழக்கிறார். அதே இரவில் ஒரு சாலை விபத்தில் கணவன் இறந்துவிட முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கணவனின் சடலத்தைக்கூட காண முடியாமல் கைக்குழந்தையுடன் அல்லாடுகிறார்.

அந்தத் தபால் பெட்டியில் வந்து சேர்ந்த போதை மருந்தும் நாசமாகிறது. இதனால் போதை மருந்து விற்பனையில் ஈடுபடும் நைஜீரிய இளைஞன் மனும் அவனது காதலியான ராப் இசைப் பாடகி லெனாம் போதைப் பொருளுக்கு பணம் செலுத்தியவர்களால் துரத்தப்படுகிறார்கள். பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் கொல்லப்படுவார்கள்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் அன்பு செலுத்த ஆளின்றித் தனிமையில் வாழும் கிரேக்க மூதாட்டியான தாலியா சிறுவயதில் தொலைத்த குழந்தையிடமிருந்து வந்த கடிதமும் அதே தபால் பட்டியில் கருகிவிடுகிறது. இவர்கள் ஒரே பகுதியில் வசித்தாலும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இந்த நால்வரும் எப்படி இணைகிறார்கள், இவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்ததா?

கிரேக்கத்தில் பல ஆண்டுகளாக அண்டை நாடுகளிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தப் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவரான மரியா லாஃபி புலம்பெயர்ந்தோரைக் கருணையுடன் அணுகியிருக்கிறார். குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அதற்கு தூக்க மருந்து கொடுத்துவிட்டு பணிக்குச் செல்லும் பெண்கள், கல்வி நிலையங்களில் தாழ்வாகப் பார்க்கப்பட்டு யாருடைய நட்பும் பரிவும் கிடைக்காததால் போக்கிரித்தனம் செய்யத் தொடங்கும் விடலைகள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களை தம் நாட்டுக்கு வரவழைத்து அவர்களின் கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அபகரித்து அவர்களைக் கொத்தடிமைகள் போல் வேலை வாங்கும் கயவர்கள் என தான் பார்த்து வளர்ந்த சூழலை இந்தப் படத்தில் மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

கதையில் கணவனை இழந்த அந்நிய நாட்டில் ஒற்றைத் தாயாகத் தவிக்கும் ஆடியாவின் கதைதான் மிகவும் உருக்கமானது. ஆனால் அது உருக்கமானது என்பதற்காக அழுது வடியும் பின்னணி இசையோ கதாபாத்திரங்கள் மிகை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோ அறவே தவிர்க்கப்பட்டிருக்கிறது. வீட்டில் தனியாக விட்டுச் செல்லப்பட்ட குழந்தை கதறி அழும் யதார்த்தமே நம் மனதைப் பதைபதைக்க வைத்து அந்தத் தாய்க்காகவம் குழந்தைக்காகவும் பரிதாபப்பட வைத்துவிடுகிறது.

போதை மருந்து கடத்தல், திருட்டு ஆகியவற்றைச் செய்யத் தயங்காத நைஜ்ரிய இளைஞன், அவன் மீது உயிரையே வைத்திருக்கும் காதலி, தன்னை மதிக்காத பெண்ணை பழிவாங்கும் பிலிப்பைன்ஸ் சிறுவன் ஆகியோரின் செய்கைகள் தார்மீக ரீதியில் நியாயமற்றவையாகத் தோன்றலாம். அதனால் அவர்கள் மீது பரிதாபப்பட முடியாது. பார்வையாளர்கள் சிலருக்கு பரிதாபம் வராமல் போகலாம். ஆனால் இந்தப் படத்தில் இயக்குநர் இப்படிப்பட்ட தீர்ப்புகளை எழுதுபவர் அல்ல. புலம்பெயர்ந்தவர்களில் அப்பாவிகளும் இருக்கலாம், தவறுகளைச் செய்பவர்களும் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தப் பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொதுச் சமூகத்தின் மனதை உலுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அந்த நோக்கத்தில் பேரளவில் வெற்றிபெற்றும் இருக்கிறார். அனைவருக்கும் உதவுபவராக அடைக்கலம் கொடுப்பவராக இருக்கும் மூதாட்டி நைஜீரிய இளைஞன் குறித்த நிறவெறியை ஒத்த கருத்தை வெளிப்படுத்துகிறார். இதுவும் மனிதர்களை அவர்கள் குறை நிறைகளுடன் பதிவு செய்ய வேண்டும் என்ற இயக்குநரின் முடிவாகவே பார்க்கலாம்.

ஒன்றரை மணிநேரத்தில் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகக் கதை சொல்லி இருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் சிக்கலை உளவியலை உள்வாங்க, அவர்களுக்காகப் பரிதவிக்க ,கோபப்பட, பதைபதைக்க பார்வையாளர்களுக்கு அதிக நேரம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை.

பின்னணி இசைக்கு ராப் வகை இசையை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றக் கூடிய இந்தத் தேர்வு திரையில் அது காட்சிகளுக்கு மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. கதாபாத்திரங்களின் வாழ்வா சாவா போராட்டத்தை ஒரு போரைப் போல் சித்தரிக்க வேண்டும் என்பதற்காகவே ராப் இசையைத் தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

புலம்பெயர்ந்தோர் பிரச்சினை உலகளாவிய விவகாரமாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடும் புலம்பெயர்ந்தோரைக் கையாள வெவ்வேறு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன. இந்தச் சூழலில் புலம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளைப் பிரச்சார நெடியில்லாமல் பேசியிருக்கும் படம் முக்கியமானதொரு கலைப் பங்களிப்பு.

SCROLL FOR NEXT