ஆசிட் தாக்குதலிருந்து மீண்டவர்களை அழைக்கும் முறைத் தொடர்பாக தீபிகா படுகோன் உருக்கமாகப் பேசியுள்ளார்.
ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகி, மீண்டு வந்து, வாழ்வில் வெற்றி கண்ட லக்ஷ்மி என்பவரின் உண்மைக் கதை, 'சப்பாக்' என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் தீபிகா படுகோன் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேக்னா குல்சார் இந்தப் படத்தை இயக்குகிறார். தீபிகா இந்தப் படத்தை இணைந்து தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் பேசும் போது, "நாங்கள் இந்தப் படத்துக்கான தோற்ற ஒத்திகைப் பார்க்கும்போது, இந்த கதாபாத்திரத்தின் தோற்றத்தில் என்னை நான் முதன்முதலில் கண்ணாடியில் பார்த்தவுடனேயே, 'நான் என்னைப் போல உணர்கிறேன்', என்று தான் இயக்குநர் மேக்னாவிடன் உடனே சொன்னேன். எதுவும் மாறவில்லை. அன்றுதான் இந்த கதாபாத்திரத்தை நான் என்னுள் கண்டதும் கூட. நமது வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து நம்மை யாரும் விவரிக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
உங்கள் முகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்று இந்த ட்ரெய்லரைப் பார்த்து நீங்கள் சொல்வது போலச் சொல்லவே கூடாது. அப்படியான சொல்லாடலே இருக்கக்கூடாது. பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களை மக்கள் நன்றாக, இயல்பாக நடத்த வேண்டும். அவர்களைப் பயங்கரமாக இருக்கிறார்கள் என்றோ, ஊனமுற்றவர்கள் என்றோ அழைக்கக்கூடாது. இந்த எண்ணத்தைச் சொல்வதுதான் இந்தப் படத்தின் நோக்கமே. படம் வெளியாகும்போது அது சரியாக மற்றவர்களுக்குச் சென்றடையும் என்று நம்புகிறேன்" என்றார் தீபிகா படுகோன்.
தீபிகாவைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மேக்னா குல்சார், இந்தப் படத்துக்காக தாங்கள் சந்தித்த, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாருமே வெளியே நடமாட, தங்கள் முகத்தைக் காட்டத் தயங்குவதில்லை என்றும். நாம் தான் அவர்களது பார்வை கண்டு அச்சப்படுகிறோம் என்றும் கூறினார்.