சினிமா

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினியை விட   77ல் அலமேலுவின் ஆடு சூப்பர் ஹீரோ!   

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


77ம் ஆண்டு ரஜினி 7 படங்களில் நடித்தார். சிவகுமார் 11 படங்களில் நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி, கமல் படங்களெல்லாம் வந்தாலும் வசூலை வாரிக் குவித்தது ஆடு. ஆமாம்... அலமேலுவின் ஆடு.


77ம் ஆண்டில்தான் ஏகப்பட்ட படங்கள், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. எம்ஜிஆர் - சிவாஜியும் காலமும், கமல் - ரஜினியின் காலமும் இருந்த காலகட்டம் அது. எழுபதுகளின் நிறைவை நோக்கிய இந்தக் காலகட்டத்தில், சிவாஜிகணேசன் நான்கு திரைப்படங்களில் நடித்தார். ’நாம் பிறந்த மண்’, ‘அவன் ஒரு சரித்திரம்’, ‘தீபம்’, ‘அண்ணன் ஒரு கோவில்’ ஆகிய நான்கு படங்களில் சிவாஜிகணேசன் நடித்திருந்தார்.


இதில், ‘அவன் ஒரு சரித்திரம்’ சுமாராகத்தான் ஓடியது. சிவாஜியும் கமலும் தந்தையும் மகனுமாக நடித்த, ‘நாம் பிறந்த மண்’ படுதோல்வியைச் சந்தித்தது. இந்தப் படத்தின் தாக்கத்தில் இருந்துதான் ஷங்கருக்கு ‘இந்தியன்’ கதை உருவானது என்றும் சொல்லுவார்கள்.


சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கே.விஜயன் இயக்கத்தில், சுஜாதா மற்றும் சுமித்ராவுடன் சிவாஜி நடித்த ‘அண்ணன் ஒரு கோயில்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சில ஊர்களில் 200 நாட்களைக் கடந்தும் பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்தும் இந்தப் படம் ஓடியது.
இதே வருடத்தில், எம்ஜிஆர் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. ‘நவரத்தினம்’, ‘மீனவ நண்பன்’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ ஆகிய படங்களில், ‘நவரத்தினம்’ படுதோல்வியைச் சந்தித்தது. ‘இன்று போல் என்றும் வாழ்க’ சுமாராக ஓடியது. ‘மீனவ நண்பன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘படகோட்டி’யில் மீனவனாக நடித்து அசத்தியது போல், இதில் வேறொரு ஸ்டைலில் எம்ஜிஆர் அசத்தினார். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டடித்தன.


கமல் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினி அறிமுகமானார். அது 1975ம் ஆண்டு. 76ம் ஆண்டில் ‘மூன்று முடிச்சு’ படத்தில் நடித்தார். 77ம் ஆண்டு மளமளவென படங்கள் குவியத் தொடங்கின, ரஜினிக்கு!


’அவர்கள்’, ‘ஆடுபுலிஆட்டம்’, ‘ஆறுபுஷ்பங்கள்’, ‘கவிக்குயில்’, ‘காயத்ரி’, ‘16 வயதினிலே’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என ஏழு படங்களில் ரஜினி நடித்தார். ‘அவர்கள்’ படத்திலும் ‘16 வயதினிலே’ படத்திலும் கமலுடன் நடித்தாலும் வில்லத்தனமான கேரக்டர் செய்திருந்தார் ரஜினி. விஜயகுமார் முதல் ஹீரோவாக நடித்த ‘ஆறு புஷ்பங்கள்’ படத்தில் ரஜினி செகண்ட் ஹீரோ. ‘புவனா ஒரு கேள்விக்குறி’யிலும் ‘கவிக்குயில்’ படத்திலும் சிவகுமாருடன் நடித்தார் ரஜினி. இதிலும் இரண்டாவது ஹீரோதான். ஆனால், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் சிவகுமாரை விட, ரஜினிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத் தக்கது. ’காயத்ரி’ படத்தில் வில்லனிக் ஹீரோ. ஆனால், இடைவேளைக்குப் பிறகுதான் ஜெய்சங்கர் வருவார். அவரே பிரதான நாயகன். ‘16 வயதினிலே’ படத்தில் கமலுடன் நடித்தார். ஆனால் சப்பாணி, மயில், பரட்டை மூவரும் வெகுவாகப் பேசப்பட்டார்கள். அவர் பேசிய ‘இது எப்படி இருக்கு’ வசனம் அந்தக் காலத்து பஞ்ச் வசனமாக எல்லோராலும் ரசிக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில், விஜயகுமார் வரிசையாக படங்கள் பண்ணத் தொடங்கினார். ஜெய்சங்கர் நடித்த ‘பாலாபிஷேகம்’ முதலான படங்களும் வெற்றி பெற்றன.


‘16 வயதினிலே’, ‘கோகிலா’, ‘உயர்ந்தவர்கள்’, ‘அவர்கள், ‘ஆடுபுலி ஆட்டம்’ ஆகிய 5 படங்களில் நடித்தார் கமல். இதில் ‘உயர்ந்தவர்கள்’ மட்டும் தோல்வியைத் தழுவியது. ‘16 வயதினிலே’ சப்பாணி, பத்துப்படங்களுக்கு நிகரான வெற்றியைத் தேடித்தந்தான் என்பது நாம் அறிந்ததுதான்.
சிவகுமாரின் படங்கள், இடைவெளியே இல்லாமல் வந்துகொண்டே இருந்தன. ’ஆட்டுக்கார அலமேலு’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘ஸ்ரீகிருஷ்ண லீலா’, ‘கவிக்குயில்’, ‘சொர்க்கம் நரகம்’, ‘சொன்னதை செய்வேன்’, ‘துணையிருப்பாள் மீனாட்சி’, ‘துர்காதேவி’, ’பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’, ’பெருமைக்குரியவன்’, ‘எதற்கும் துணிந்தவர்கள்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, என 11 படங்களில் நடித்தார்.
இதில், ‘துணையிருப்பாள் மீனாட்சி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

‘கவிக்குயில்’ படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் நெகடீவ் ரோல்தான் என்றாலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் சிவகுமார்.


இவை எல்லாவற்றையும் விட, ‘ஆட்டுக்கார அலமேலு’ திரைப்படம், மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. நாயகி ஸ்ரீப்ரியாவுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஆனாலும் நடித்திருந்தார். அதேபோல், சிவகுமாரை விட ஸ்ரீப்ரியாவுக்கு பெயர் கிடைத்தது. ஸ்ரீப்ரியாவை விட, படத்தில் நடித்த ஆடு அப்ளாஸை அள்ளிச் சென்றது.


இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு ஆடு அழைத்துச் செல்லப்பட்டு,ரசிகர்களுக்கு மேலும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது. வசூலை வாரிகுவித்தது... அலமேலுவும் அந்த ஆடும்தான்!

SCROLL FOR NEXT