சினிமா

நிஜத்திலும் பொறுமைசாலி ஆகிட்டேன்!- ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ நடிகை நட்சத்திரா நேர்காணல்

செய்திப்பிரிவு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ நெடுந்தொடர், 200 அத்தியாயங்களைக் கடந்துள்ளது. குஷ்பு, சுரேஷ், சுதாசந்திரன், டெல்லிகணேஷ் என பிரபல நட்சத்திரங்கள் அலங்கரிக்கும் இத்தொடரில் பாக்யலட்சுமி என்ற கதாபாத்திரம் ஏற்று அனைவரின் பாசத்தையும் அள்ளிவருகிறார் நட்சத்திரா. அவருடன் ஒரு நேர்காணல்..

குறும்படம், இசை ஆல்பம் என சுற்றி வருபவர் நீங்கள். நெடுந்தொடர் வாழ்க்கை எப்படி நகர்கிறது?

200 அத்தியாயங்கள்.. கிட்டத்தட்ட ஒரு வருஷம். நம்பவே முடியல. குறும்படம், விளம்பரப் படம், இசை ஆல்பம் எனும்போது அந்த கதாபாத்திரத்தை நாலைந்து நாட்களுக்கு மனசில் நிறுத்தியிருப்போம். நெடுந்தொடர் அப்படி இல்லை. தினம் தினம் பாக்யலட்சுமியாவே வாழ்ந்துட்டு வர்றேன். யாராவது என் நிஜப் பெயரை சொல்லி கூப்பிட்டா, எப்படி திரும்பிப் பார்ப்பேனோ, அதேமாதிரி, ‘லட்சுமி’ன்னு கூப்பிட்டாலும் சடார்னு திரும்பிப் பார்க்கிறேன். அது மட்டுமில்லாம, தொடரில் பொறுமைசாலியா நடிச்சு நடிச்சு, நிஜ வாழ்க்கையிலும் பொறுமைசாலி ஆகிட்டேன்.

தொடரில் குஷ்புவும் இருக்கும்போது, உங்களுக்கான முக்கியத்துவம் எந்த அளவுக்கு உள்ளது?

இது பெரிய குடும்பப் பின்னணியில் அமைந்த கதைக்களம். இதில் கதாநாயகன், கதாநாயகி என்பதெல்லாம் இல்லை என்பதால், நடிப்பதற்கான சூழல் எல்லோருக்கும் இயல்பாகவே அமையும். தவிர, குஷ்புவும் தனக்குத்தான் அதிகமான காட்சிகள் இருக்கணும்னு ஒருநாள்கூட நினைத்தது இல்லை.

குஷ்பு உடனான இந்த பயணம் குறித்து..

திரைப்படம், தொடர், தயாரிப்பு என தான் சுமக்கும் எல்லாவிஷயங்களையும் வெற்றிகரமாக தரணும்னு தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கும் உழைப்பாளி அவங்க. சினிமாவில் சின்ன நடுக்கம்கூட இல்லாமல் பயணிக்கிறவங்க. என் சின்ன வயதில் இருந்தே அவங்களை பார்க்கிறேன். பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கவாய்ப்பு கிடைக்கும்போது, அவ்ளோபாசிடிவ் எனர்ஜியோடு பேசுவாங்க.
அவங்க இத்தொடரில் இருக்காங்கன்னு தெரிஞ்சதுமே ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவங்ககிட்ட நிறைய கற்றுக்கொள்ள முடியுது. அவங்களோடு பயணிப்பது நல்ல வாய்ப்பு.

நெடுந்தொடர் நடிப்பு வேண்டாம்னு முதலில் சொன்னீங்களாமே?

சன் டிவியில் தொகுப்பாளினியாக நான் உள்ளே வந்ததில் இருந்தே, புதுப்புது தொடர் தொடங்கும்போதெல்லாம் என் பெயர் அடிபடும். அந்த நேரத்தில் படிப்பும் தொடர்ந்ததால், பல நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியாதநிலை இருந்தது. அதனால் நெடுந்தொடர் நடிப்பை தவிர்த்தேன். சன் குழுமத்தில்நடிப்போ, தொகுப்போ.. எதுவாகஇருந்தாலும் என் பங்களிப்பு கட்டாயம் இருக்கணும்னு ஆசைப்படுபவள் நான். அதுவும் குஷ்பு சீரியல் வேறு. உடனே சம்மதிச்சிட்டேன்.

டிப்பு பக்கம் வந்தாச்சு. இனிமே குறும்படம், யூ-டியூப் விழிப்புணர்வு படம் ஆகியவற்றில் உங்கள் பங்களிப்புகள் இருக்குமா?

நிச்சயமா. நெடுந்தொடர் படப்பிடிப்பு போக மீதி இருக்கும் ஐந்து,ஆறு நாட்களில் அதுபோன்ற வேலைகள்தான் மனசுக்கு ரிலாக்ஸ், ஜாலி. அதனால் அதை ஒருபோதும் விடமாட்டேன்!

SCROLL FOR NEXT