சினிமா

ஊக்கம் தருகிறது தெகிடியின் தெரிவு- இயக்குநர் ரமேஷ் நெகிழ்ச்சி

கா.இசக்கி முத்து

சின்ன பட்ஜெட், அதிகம் அறிமுகமில்லாத நடிகர்கள்... ஆனால், கதை - திரைக்கதை அமைப்பு மூலமாக விமர்சகர்களை வெகுவாக கவர்ந்தது. 'தெகிடி'. அசோக் செல்வன், ஜனனி நடித்திருந்த 'தெகிடி' படத்தை இயக்கியவர் ரமேஷ்; சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

12-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் ரமேஷ்.

அவரை தொடர்பு கொண்டபோது, "ரொம்ப சந்தோஷமா இருக்கேன். படம் ஆரம்பிக்கும்போது கண்டிப்பாக வரவேற்பு மட்டுமன்றி ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்னு எல்லாருமே நினைத்தோம். அது இப்போது கிடைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் கதை நல்லா இருந்தால் மட்டுமே நல்ல ரீச் இருக்கும். 'தெகிடி' அதற்கு உதாரணமாகத் தான் பார்க்கிறேன்.

இப்படம் தேர்வாகிவிட்டதால் இன்னும் அடுத்த படங்கள் பண்ணும்போது பொறுப்புணர்ச்சி கூடுகிறது. இப்படத் தேர்வு கண்டிப்பாக என்னுடைய அடுத்த படங்களும் தேர்வாக வேண்டும் என்ற முனைப்போடு கண்டிப்பாக செயல்படுவேன். என்னை அடுத்த இடத்திற்கு நகர்த்தி இருக்கிறது சென்னை சர்வதேச திரைப்பட விழா" என்றார்.

தெகிடி விமர்சனம்:

முற்றிலும் புதுமையான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்துத் திரில்லர் வகைப் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ். குற்றவியல் படிப்பு, துப்பறியும் களம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான திரில்லரைத் தந்திருக்கிறார். கதையோடு ஒன்றிய காதலையும் இணைத்திருக்கிறார்.

இதுபோன்ற சஸ்பென்ஸ் திரில்லர்களில் கொலை செய்யப்படும் நபர்கள் பெரிய மனிதர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எதாவது பின்புலம் இருக்கும். ஆனால் இங்கு கொல்லப்படுவது எந்த பின்புலமும் இல்லாத சாதாரண மக்கள். இந்த முடிச்சினை நேர்த்தியாகக் கோர்த்துச் சிக்கல் இல்லாமல் அவிழ்த்திருக்கிறார் இயக்குநர். ஒரு கட்டம் வரையிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் யூகிக்க முடியாதபடி நிகழ்கின்றன. கொலைக்குப் பின்னால் இருக்கும் மர்மம் விலகும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

அப்சர்வேஷன் என்பதற்கான விளக்கம், துப்பறிவதன் உத்திகள் ஆகியவை நன்றாக இருக்கின்றன. சில இடங்களில் வசனங்கள் நன்றாக உள்ளன. பாடல்கள் வேகத் தடைகளாக அல்லாமல் கதையோடு சேர்ந்து பயணிக்கும் காட்சிகளின் தொகுப்பாக இருப்பது நல்ல விஷயம்.

தினேஷ்கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தி. குறிப்பாக இருட்டுக் காட்சிகள். வலுவான கதை முடிச்சு, விறுவிறுப்பான திரைக்கதை, தேவையான அளவு சஸ்பென்ஸ் உள்ளிட்டவை படத்துக்கு பலம் சேர்ப்பவை. தெகிடி என்றால், வஞ்சம், சூது, ஏமாற்றுதல் என்றெல்லாம் பொருள். ஏமாற்றுவதைப் பற்றிய படம், ரசிகர்களை ஏமாற்றாது.

SCROLL FOR NEXT