சினிமா

தவறவிடாதீர்... - யூ டர்ன்: விதிகளை மீறும் அனைவருக்கும்..!

கருந்தேள் ராஜேஷ்

ஜன.9 - ரஷ்ய கலாச்சார மையம் | பிற்பகல் 2.00 | U-TURN | DIR: PAWAN KUMAR | KANNADA | 2016 | 121'

'லூஸியா'வின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பவன் குமார் எடுத்து வெளியிட்ட படம்தான் 'யூ டர்ன்'. படத்தின் நீளம் இரண்டே மணி நேரங்கள்தான். பாடல்கள் இல்லை. ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதைச் சுற்றி ஒரு சுவாரஸ்யமான கதையை எழுதியிருக்கிறார் பவன் குமார்.

படத்தில் கையாளப்பட்டுள்ள அந்த முக்கியமான பிரச்சினை என்ன என்பதை நீங்கள் திரையரங்கில் பார்த்துக்கொள்ளலாம். இந்தியாவில் எல்லா ஊர்களிலும் நடக்கும் பிரச்சினைதான் அது. வேண்டுமென்றே விதிகளை மீறும் நபர்களால், அவர்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத நபர்கள் எப்படிப் பாதிப்படைகிறார்கள் என்பதே படத்தின் கரு.

பொதுவாக, த்ரில்லர்களை எழுதி இயக்குவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை, படம் பார்ப்பவர்களுக்கு அடுத்து வரும் சம்பவங்களை யூகிக்க இடம் கொடுத்துவிடுவதுதான். பல த்ரில்லர்களில், வில்லன் யார், கொலைகள் எப்படி நடக்கின்றன போன்ற விஷயங்கள் எல்லாமே எளிதில் யூகிக்கப்பட்டுவிடுகின்றன. அதிலும் பவன் குமார் நன்றாகவே தேறியிருக்கிறார்.

ஒரு சிறிய முடிச்சு, அது அவிழும்போது அதைவிடப் பெரிய முடிச்சு, அதைத் தெளிவாக்கும்போது இன்னொரு மிகப் பெரிய முடிச்சு என்று படிப்படியாக வரும் திருப்பங்கள் சுவாரஸ்யமானவையே. இவற்றோடு, உணர்வுகளுக்கும் நல்ல முக்கியத்துவம் அளித்திருப்பதால், கிட்டத்தட்ட படம் முழுக்கவுமே, இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்கும் அனுபவமே ஏற்படுகிறது. எங்குமே இழுவை இல்லாமல், ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிப்படியான சிக்கல்கள் மூலம் நம்மைத் திரையரங்கில் மிகுந்த கவனத்துடன் படம் பார்க்க வைத்திருப்பதே பவன் குமாரின் வெற்றி.

நம்மூரில் வெளியான மிஷ்கினின் 'பிசாசு' படத்துக்கும் 'யூ டர்'னுக்குமே ஓரளவு தொடர்பு உண்டு. 'யூ டர்ன்' பார்த்தால் இதைப் புரிந்துகொள்வீர்கள்.

யூ டர்ன், அவசியம் திரையரங்கில் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். இதில் பேசப்படும் கரு அப்படிப்பட்டது. இந்தியாவில், விதிகளை மீறுவதை ஜாலியாகச் செய்பவர்கள் நாம் அனைவரும் என்பதாலும் இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அப்போதுதான், விதிகளை மீறுவதன் பாதிப்புகள் கொஞ்சமாவது நமது மனங்களில் ஒட்டும்.

SCROLL FOR NEXT