16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டிசம்பர் 15-ம் தேதி தாகூர் ஃபிலிம் இன்ஸ்ட்டியூடில் மதியம் 2 மணிக்கு திரையிடவுள்ள படம் 'தி கட்'. ஓட்டாமன் பேரரசுக்கு நேர்ந்த வலி மிகுந்த நிகழ்வுகளில் நம்மையும் பிணைத்து பாலைவன வெயிலில் அலையவிடும் அந்த ஜெர்மானியப் படம் ‘தி கட்’.
ஒரே இரவில் திசைமாறும் வாழ்க்கை
கொல்லுப்பட்டறை ஊழியன் நாசரேத், தனது குடும்பத்தோடு மகிழ்ந்திருக்கும் மாலை நேரத்திலிருந்து படம் தொடங்குகிறது. அப்போது ராணுவம் நுழைந்து அரசு வேலைக்கு என்று கூறி அவனை இழுத்துச் செல்ல, குடும்ப மகிழ்ச்சி மட்டுமல்ல, குடும்பமே காணாமல் போகிறது. பல குடும்பங்களும் இவ்வாறு சிதற, ஆர்மேனிய தேசமே தடம் புரள்கிறது.
பாலைவனத்தில் நாசரேத் சாலைப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறான். நாசரேத் போலவே பல ஆயிரம் ஆர்மேனியக் குடிமகன்களுக்கு உணவும் குடிநீரும் தரப்படுவதில்லை; ஆனால் அவர்களது உழைப்பு மிருகத்தனமாக உரிஞ்சப்படுகிறது. வேலையில் சுணக்கம் காட்டுபவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து மதம் மாறுபவர்கள் மட்டும் உயிர்பிழைக்க முடியும் என அங்கு வரும் ஒரு துருக்கிய அதிகாரி கூறுகிறார்.
மறுப்பவர்களும் கொல்லப்படு கிறார்கள். சுட்டால் புல்லட் வீண் என எல்லோரும் துருக்கியக் கைதிகளால் கழுத்தறுக்கப்படுகிறார்கள். இரக்கமுள்ள துருக்கியக் கைதி நாசரேத்தின் கழுத்தை அறுக்காமல் தொண்டையில் குத்திவிட அவனும் விழுகிறான். உயிர் பிழைத்தும் கிழிபட்ட தொண்டையோடு பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாலும் தப்பிக்கிறான். வழிகளில் பாலைவனப் பொட்டலில் மக்கள் வதைமுகாம்களில் பட்டினியில் சாவதைக் காண்கிறான்.
ஆர்மேனியர்கள் எப்படித் தங்கள் வாழ்நிலத்தை விட்டுத் தப்பித்து உலகம் முழுவதும் அலைந்து திரிந்து பரவினரோ அதன் அடிநாதத்தோடு திரைக்கதை அமைந்துள்ளது. ஒரு இளைஞனின் தேடலிலிருந்தே படம் நகர்வதால் போரிலிருந்து வெளியே வந்து நாமும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம். சொந்தங்கள் உயிரோடு இருப்பதைக் கேள்வியுற்றுப் பாலைவனத்திலிருந்து வெளியேறித் தேடிச் செல்லும் இளைஞனின் தன்னிச்சையான பயணமாகப் படம் மாறுகிறது. இரண்டாவது பாதியில் நாசரேத்தின் உணர்ச்சிமிக்க பயணத்தைப் பின்தொடர்கிறோம்.
பாலைவனத்தில் ஒரு நீரூற்று
சொந்தங்களின் பிரிவால் வாடும் நாசரேத் அலெப்போவில் கல்கோட்டைகளில் அமைந்துள்ள சோப்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும்போது, மக்களோடு அமர்ந்து சாப்ளினின் ‘தி கிட்’ திரைப்படம் பார்க்கும் காட்சி நெகிழ்ச்சிமிக்கது. நகைச்சுவையில்
திளைக்கவும் யாரோ பெற்ற பிள்ளையின்மீது வைத்த பாசத்துக்கே பிரிவு நேரும்போது வருந்தி உறைந்து போகவுமான எளிய மனிதனின் கதை விரியும் காட்சிகளில் ‘தி கிட்’ நாயகனின் வலியில் இணைந்து தன்னைக் கரைத்துக்கொள்கிறான் நாயகன்.
தன்னிடம் பயிற்சியாளனாகப் பணியாற்றிய மாணவன் ஒருவன் இவனைத் தெரிந்து, குடும்பத்தினர் உயிரோடிருப்பதைத் தெரிவிக்கிறான். பாலைவனத்தில் ஒரு நீரூற்றைக் கண்டதுபோல் மனம் துள்ள, அங்கிருந்து விடுபடுகிறான். தொடர்ந்த தேடலில் இரு மகள்கள் எஞ்சியுள்ளனர் எனும் செய்தி கிடைக்கிறது. உலகின் எந்த மூலைக்கும் அவர்களைத் தேடித் துரத்துகிறது அந்தத் தந்தையின் தவிப்பு மிகுந்த தாகம். கியூபாவில் மகள்களை வளர்த்த நாவிதத் தம்பதியினர் தேடலில் உதவுகிறார்கள்.
நெடும்பயணம்
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திறந்த கூட்ஸ் ரயிலில் மழையில் பயணித்து, கப்பலில் வேலைசெய்து கடலைக் கடந்து, லெபனான் சென்று பரந்து விரிந்த ஹவானா வீதிகளில் தேடித் திரிந்து, அமெரிக்காவின் வடக்கு டாகோட்டாவில் பனி மண்டிய இரவுகளில் அலையும் நாயகனின் பயணங்களை நெருக்கமாக உணரவைக்கும் ஒளிப்பதிவைத் தந்துள்ளார் ரெய்னர் கிளாஸ்மேன். ஹிட்லரின் இறுதி நாட்கள் குறித்துப் பேசிய ‘டவுன்பால்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரெய்னர்.
தொலைதூரப் பாலைவன நடைபயணத்தில் விழும்போது இறந்த மனைவி அவனை எழுப்புவதும், வட அமெரிக்காவில் ரயில்பாதை செப்பனிடும் கூலியாகப் பணியாற்றும்போது ஒரு நாடோடிப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதைத் தடுப்பதற்கான கைகலப்பில் விழ நேர்ந்து நள்ளிரவுப் பனியிலிருந்து மகள்கள் அழைப்பதுபோன்ற கனவுக் காட்சிகளில் நம்மை ஏங்கவைக்கிறார் இயக்குநர் ஃபேடிக் அகின். துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மானியன் அவர். திரைக் கதையில் துணைபுரிந்த மார்டிக் ஆர்மேனிய அமெரிக்கன். வாய்பேசா பாத்திரமேற்ற ரஹீம் என்றென்றும் சித்திரமாகி நிற்கிறார் நம் மனதில்.
இரண்டாம் உலகப் போரைப் பேசிப் பேசி ஜெர்மனியை (உண்மை யென்றாலும்) பழிபாவத்துக்குத் தள்ளிய அளவுக்கு, வரலாற்றாசிரியர்கள் முதல் உலகப்போரின் பேரரசுவாதப் போக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததற்கு என்ன காரணம்? மிகச் சரியாக 100 ஆண்டுகளுக்குமுன் எங்கோ ஆஸ்திரிய ஹங்கேரிய சண்டையாகத் தொடங்கியது முதல் உலகப் போர்.
அதன் பிறகு ஒட்டாமான் போன்ற பேரரசுகள் வீழ்த்தப்பட நேரும்போது அங்கு சம்பந்தமே இல்லாமல் படுகொலை செய்யப்பட்ட நூறாயிரக்கணக்கான ஆர்மேனிய மக்களின் ஆன்மாக்கள் சர்வாதிகாரிகளை மன்னிக்கின்றனவோ இல்லையோ வல்லரசுகளின் கோரப் பற்களில் சிக்கிய இனவழிப்பு வரலாற்றைப் பேசாமல் விட்ட வரலாற்றாசிரியர்களை அவை மன்னிக்கப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது.
படத்தின் ட்ரெய்லர்: