சுப்ரமணி
இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி உடன் சென்னை சர்வதேச திரைப்பட விழா பார்வையாளர்கள் நடத்திய கலந்துரையாடலில் பல்வேறு தகவல்களும் அனுபவங்களும் பகிரப்பட்டன. புஷ்கர் - காயத்ரி பகிரந்தவற்றின் 10 அம்சங்கள்:
* "நாங்களும் 'ஐகாஃப்' உறுப்பினர்கள்தான். நாங்கள் படித்த காலத்தில் அமேசான், நெட்ஃப்லிக்ஸ் போன்ற தளங்கள் கிடையாது. இந்த அமைப்பு மூலம்தான் உலக சினிமா பலவற்றை கண்டோம். "ப்ரீத் லெஸ்,ட்ரூ ஃபோர்ஸ்" போன்ற கலை படங்கள் எங்களை மிகவும் ஈர்த்தன."
* "சினிமா எதையும் சாராமல், பொதுவாக இருக்கவேண்டும். கமர்ஷியல் படங்களையும், கலைப் படங்களையும் கையாள்வதில் சமநிலைத் தன்மை வேண்டும்."
* "நாங்கள் முதலில் விளம்பரங்களை இயக்கிக் கொண்டிருந்தோம். 15 வருடங்களுக்கு முன் 'டிக் டாக்' என்ற நூலகத்தில் உலக சினிமா பார்ப்போம். தூர்தர்ஷனில் சத்யஜித் ரேயின் படங்கள்தான் எங்களுக்கு மிகவும் உதவியன. அன்று ஆண்டிற்கே 20 படங்கள்தான் காணமுடியும். ஆனால் இன்று திரைப்பட விழாக்களில் ஏராளமான படங்களை காணமுடிகிறது. சர்வதேச திரைப்பட விழாக்கள் நமக்கு சிறந்த உலகத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து தருவதில் மிகவும் உதவுகிறது."
* "சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துரையாடல் மூலம் நம்மால் படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், கூறப்பட்ட கருத்துக்கள் போன்றவரை புரிந்துகொள்ள முடிகிறது."
* "பெர்லின், வெனிஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் படங்கள் திரையிடப்படுதல் மட்டுமல்லாது பிறநாட்டவர் அப்படத்திற்க்கான வெளிநாட்டு வியாபாரத்தையும் மேற்கொள்வர். திரைப்பட விழாக்கள் பொருளாதார வணிகத்தையும் மேற்கொள்ளும். இதன்மூலம் வெளிநாட்டு பிரதிநிதிகளின் நட்புறவு கிடைக்கும், அது மிகவும் முக்கியமானது."
* 'Hereditary' என்ற ரஷ்ய த்ரில்லர் திரைப்படம் சண்டான்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளை பெற்றதோடு, பொருளாதார ரீதியாகவும் வெற்றிபெற்றது. இது மாதிரியான த்ரில்லர் படங்கள், கலை படத்துக்கான அனைத்து அமசங்களையும் உள்ளடக்கும். டார்க்கோவ்ஸ்க்கை சினிமாவை 'Sculpting in time' என்று கூறுவார்.
* "நாங்கள் இயக்கிய படங்கள், கலை நயத்துடன் கமர்ஷியல் கன்டென்டுகளையும் கொண்டு நடுநிலையில் பொருந்தும். இது அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேரும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை, படக்குழுவினர் பொருளாதார ரீதியாக வெற்றி பெறவே விரும்புவர். பெங்காலி போன்று ஆழ்ந்த கருத்துக்களுடன் படம் எடுக்க தயங்குவர்."
* "தமிழ் சினிமாவில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாது என்பதனால் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு அந்த விளம்பரத்துடன் பிறகு வெளிவந்து வசூல் புரிகிறது என்று பொய்யான நம்பிக்கை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டுக்கு அனுப்புவது மிகுந்த செலவுக்குரியது. எளிதாக அனுப்பி பாராட்டுக்களை பெற்றுவிடமுடியாது."
* "புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களைத்தான் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் திரையிட முடியும். வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் சர்வதேச விழாக்களில் புகழ்பெற்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தமிழில் கலைப்படங்களை இயக்குவதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், பா.ரஞ்சித் சிறந்து விளங்குகின்றனர்."
* "ஒரு கமர்ஷியல் சினிமா எடுக்க வேண்டும் என்றால்தான் நாம் வசூலை நம்பி வருந்த வேண்டும். கலைநயப் படங்கள் எடுக்க வேண்டும், கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர வேண்டுமென்றால்... இன்று நிறைய சமூக வலைதளங்கள் இருக்கின்றன. யூடியூப் தளத்தில் வெளியிட்டு அதை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற முடியும். நாம் எதற்காக படம் எடுக்கிறோம் என்பதுதான் இயக்குனருக்கு முக்கியமான கேள்வி."