ROJO | ARGENTINA | 2018 |தேவி, காலை 11.00 மணி
70களில் நடக்கும் கதை. குடும்பம், நண்பர்கள் என ஒரு பிரபல வழக்கறிஞரின் வாழ்க்கை மிகச் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வெளியூரிலிருந்து ஒரு அந்நியன் அங்கு வருகிறான். அவன் வெளித்தோற்றத்திற்கு அமைதியானவன், துப்பறிவாளன். அவன் வந்தபிறகு வழக்கறிஞர் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களும் கேள்விகளும் உருவாகிறது. டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் பெற்ற படம்.
PADMAAVAT | HINDI | 2018 | ரஷிய கலாச்சார மையம், காலை 10.00 மணி
ரஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதிக்கும் ரஜபுத் அரசின் மேவார் மாகாண சிற்றரசர் ராணா ராவல் ரத்தன் சிங்குக்கும் இடையிலான காதல் மற்றும் தியாகத்தின் பிரதிபிம்பமாக அமைந்த படம். அவர்கள் காதல் வாழ்க்கையில் எந்த சிக்கலுமில்லை, அலாவுதீன் கில்ஜியின் கண்கள் பத்மாவதியின்மேல் விழும்வரை. கில்ஜி வம்சத்தின் கொடூர அரசர்களில் ஒருவனான அலாவுதீன் கில்ஜி சொந்த சகோதரர்கள், மாமனார், சித்தப்பாக்கள் உள்ளிட்ட பலவரையும் கொன்றுவிட்டு அரியணை ஏறியவன்.
நிலத்தையும் பெண்களையும் கைப்பற்றுவதற்காகவே அவன் அவன் படையெடுத்துத் தாக்குபவன். அவ்வகையிலேயே அலாவுதீன் கில்ஜி பத்மாவதியை தன் வசமாக்கிக்கொள்ள திட்டமிட்டு ராஜா ரதன் சிங் ஆண்டு வந்த சித்தொர்கர் சாம்ராஜ்யத்தின் மீது படையெடுக்கிறான். கொஞ்சம் வரலாறும் நிறைய புனைவுகளும் கலந்த கதை நிறைய சர்ச்சைகளையும் தடைகளையும் சந்தித்தது.
VOLCANO / VULKAN | UKRAINE | 2018 | தேவிபாலா, பகல் 1.00 மணி
லூகாஸ், இவர் ராணுவத்துக்கு மொழிபெயர்ப்பாளராக இருப்பவர். ஒரு பயணத்தின் போது தெற்கு உக்ரைனின் ஒரு சிறு ஊரில் சிக்கிக் கொள்கிறார். விசித்திர ஊரில் விசித்திரமான மனிதராக லூகாஸ். இங்கு துரதிர்ஷ்டவசமான பல நிகழ்வுகளுக்குள் வீழ்கிறார் லூகாஸ். கதை ஒரு டார்க் ஹியூமர் பாணியில் செல்லும், காட்சிகள் ஆழ்மன எதார்த்தச் சித்தரிப்புகளாக சர்ரியல் வண்ணம் கொள்கிறது.
கடுமையான சிறை உள்ளிட்ட அனுபவங்களுக்குப் பிறகு ஒரு வீட்டில் அடைக்கலமாகிறார். அங்கு வோவோ என்பவரும் அவரது மயக்கும் மகள் மருஷ்கா ஆகியோர் உள்ளனர். கதைப்போக்கு குறுக்குமறுக்காகச் செல்லும், நேர்கோட்டு திரைவாசகனுக்கு இந்தப் படம் வேறொரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.
AXING / DARKOOB | IRAN | 2018 | அண்ணா, பகல் 12.30 மணி
தன் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறாள் மாஷா. ஆனால், அந்தக் குழந்தை உயிருடன் மாஷாவின் முன்னாள் கணவனிடம் வளர்வது தெரிய வருகிறது. எனவே, குழந்தையை அழைத்து வருவதற்காக செல்கிறாள். அப்போது அவளுடைய முன்னாள் கணவனையும், அவருடைய புது மனைவியையும் சந்திக்க நேர்கிறது. தீர்வின் இறுதி வடிவத்திற்குள் பல்வேறு பிரச்சினைகள் வெடிக்கின்றன. 2 விருதுகள் 8 பரிந்துரைகள் பெற்ற படம்.
AMIN | FRANCE | 2018 | தேவிபாலா, மாலை 5.30 மணி
செனகல் நாட்டைச் சேர்ந்த அமீன், பிழைப்புக்காக பிரான்ஸ் நாட்டுக்கு வேலைக்கு வருகிறார். அமீனுக்கு ஆயிஷா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். பாரி்ஸ் நகரின் புறகநகரில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் அமீன் தன்னுடைய சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை செனகல் நாட்டில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்புகிறார். ஒருநாள் பாரிஸ் நகரில் ஒரு செவிலியர் வீட்டுக்கு வேலைக்குச் செல்லும் அமீன், அவருடன் தொடர்பு ஏற்படுகிறது. அதன்பின் அமீன் வாழ்க்கை என்ன ஆனது என்பதை கதை விவரிக்கிறது. கேன்ஸ் திரைவிழாவில் டைரக்டர்ஸ் ஃபார்ட்நைட் பிரிவில் திரையிடப்பட்ட படம்.
MALCOLM | AUSTRALIA | 1986 | கேஸினோ, பகல் 12.15 மணி
கூச்ச சுபாவம் கொண்டவர் கதையின் நாயகன். இயந்திரங்களை வைத்து மாயாஜாலம் புரிவதில் திறமையானவர். ஒரு கட்டத்தில் தனது வேலையை இழக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து வங்கிகளில் திருட ஆரம்பிக்கிறார். இவர்களது வாழ்க்கை எவ்வாறு நகைச்சுவை மற்றும் சுவாரசியங்களுடன் பயணிக்கிறது என்பதை கூறுகிறது மல்காம் திரைப்படம். 86ல் இத்திரைப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநருக்கான விருதுகளை ஆஸ்திரேலிய திரைவிழாக்களில் பெற்றுள்ளது.