சினிமா

திரை விமர்சனம்: இரும்புத்திரை

செய்திப்பிரிவு

வி

ஷால் சிறு வயதாக இருக்கும்போது, தந்தை டெல்லி கணேஷ் பலரிடம் கடன் வாங்குகிறார். இதனால் குடும்பமே அவமானப்பட்டு நிற்கிறது. மன வேதனையில் விஷாலின் அம்மா உயிரிழக்கிறார். இது விஷால் மனதில் ரணமாகப் பதிகிறது. பின்னர் ராணுவப் பள்ளியில் சேர்க்கப்பட்டு கண்டிப்புடன் வளர்ந்து, மேஜராகிறார். பிறகு தந்தை, தங்கையுடன் தொடர்பு இல்லாமல் சென்னையில் வசிக்கிறார். அப்போது ஒரு பிரச்சினையில், வங்கி ஊழியரைத் தாக்க, ராணுவத் துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகிறார். மனநலச் சான்று பெற மருத்துவர் சமந்தாவைச் சந்திக்கிறார். அவரது அறிவுறுத்தலால், சொந்த ஊருக்கு வந்து, தந்தை, தங்கையுடன் நாட்களைச் செலவிடுகிறார். இந்த நிலையில், தங்கையின் திருமணத்துக்காக வங்கிக் கடன் பெற முயற்சிக்கிறார். ராணுவ அதிகாரி என்பதால், வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. இதையடுத்து, வியாபாரத்துக்கு என்று கூறி அவர் பெற்ற வங்கிக் கடன் உள்ளிட்ட ரூ.10 லட்சம் தொகை, வங்கிக் கணக்கில் இருந்து மர்மமாக திருடப்படுகிறது. பணம் திரும்பக் கிடைத்ததா, தங்கை திருமணம் நடந்ததா? என்ற கேள்விகளுக்கு விடை காண்கிறது படம்.

கேஷ்லெஸ் இந்தியா எவ்வளவு கேர்லெஸ்ஸாக இருக்கிறது என்பதை உணர்த்தும் திரைக்கதை. வங்கிக் கணக்கில் நாம் ‘பத்திரமாக’ போட்டு வைக்கும் பணத்தை, எங்கோ இருந்துகொண்டு யாரோ ஒருவர் அபகரிக்க முடியும் என்பதையும், சைபர் கிரைம்கள் பற்றி எதுவுமே தெரியாத சாமானியர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் எவ்வளவு பாதகமாக மாறுகின்றன என்பதையும் இயக்குநர்பி.எஸ்.மித்ரன் புத்திசாலித்தனமாக உணர்த்துகிறார். சாமானியர்களை அரசு பொருளாதார ரீதியாக எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதை படம் சுவைபடச் சொல்கிறது. ‘பிக் பாஸ்’, ரஜினி அரசியல், ஆதார் கார்டு தகவல் திருட்டு போன்ற பல விஷயங்களை போகிற போக்கில் நையாண்டியுடன் தொட்டுச் செல்வதால், லாஜிக் மீறல்களையும் சகித்துக்கொள்ள முடிகிறது. கதையின் ஓட்டத்தில் டூயட், வெளிநாட்டு பாடல் போன்றவை திணிக்கப்படாதது பாராட்டுக்குரியது.

விஷால், ராணுவ மேஜராக ஆரம்பத்தில் மிடுக்கு காட்டுகிறார். சண்டைக் காட்சிகளில் நன்கு திறமையை வெளிப்படுத்துகிறார். சமந்தாவுடனான அவரது காட்சிகள் இயல்பாக இருக்கின்றன. மனநல ஆலோசகராக வரும் சமந்தாவுக்கு நடிக்கப் பெரிய வாய்ப்பு இல்லை. என்றாலும், வருகின்ற காட்சிகளில் தனது தோற்றத்தாலும், கண்ணியமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதைக் கவர்கிறார். சத்யமூர்த்தி என்ற ஒயிட் டெவில் வேடத்தில் கனகச்சிதமாக நடித்திருக்கிறார் அர்ஜுன். அவரது நடிப்பு கெத்தாக இருந்தாலும், ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி அவ்வப்போது ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. கடைசியில் விஷால் - அர்ஜுன் மோதும் காட்சிகளில் பொறி பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும்போது, அர்ஜுன் கையில் விலங்கை மாட்டிவிடுகின்றனர்.

விஷாலின் தந்தை டெல்லி கணேஷ் பொருத்தமான தேர்வு. வெகுளியான தந்தை வேடத்தை தனது இயல்பான நடிப்பால் முழுமையாக்கி இருக்கிறார். திருநெல்வேலி பாஷையில், ரோபோ சங்கருடன் சேர்ந்து ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் காட்சி கலகலப்பு. தொழில்நுட்ப ரீதியாக அதலபாதாளத்தில் இருக்கும் சராசரி குடிமகனுக்கு சரி யான எடுத்துக்காட்டு அவர். விஷாலின் தங்கையாக வரும் பெண்ணும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக தாயின் பாசம் கிடைக்காமல் போய், அண்ணனும் பாராமுகம் காட்டுவதை வெளிப்படுத் தும் காட்சியில் முத்திரை பதிக்கிறார்.

வங்கியில் பணம் படைத்தவர்கள் மட்டுமல்ல; ஜீரோ பேலன்ஸிலேயே இருப்பவர்கள்கூட பார்க்கவேண்டிய படம். ஆனால், சமூக வலைதளங்களில் பணமில்லா பரிமாற்றத்தால் நடக்கும் குற்றங்கள் மற்றும் மனிதர்களின் அந்தரங்க தகவல்களை ஹேக்கர்கள் நவீன செயலிகள் மூலம் திருடுவது போன்ற டிஜிட்டல் கிரைம்களை இன்னும் சற்று புரியும்படி கூறியிருக்கலாம். படத்தில் சைபர் குற்றங்களை கதாபாத்திரங்கள் விவரிக்கும்போது, பலரும் புரியாமல் விழிக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் நெல்லையின் அழகும், சென்னையின் ஆர்ப்பாட்டமும் நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ‘‘விவசாயிக்கு FB-யில லைக் போடுங்க, ஆனால் லைஃப்ல உதவாதீங்க’’ என்பது போன்ற வசனங்களும், எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்புக்கு பேருதவி புரிகின்றன.

டிஜிட்டல் இந்தியாவுக்கும் சாமானிய இந்தியருக்கும் இடையிலான தொழில்நுட்ப இடைவெளியை நன்கு காட்சிப்படுத்தி இருக்கிறது இரும்புத்திரை.

SCROLL FOR NEXT