பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவுச் செய்தி திரை உலகை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார். சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்த நடிகர்.
சின்னத்திரையில் அவர் நடிகை ராதிகாவின் சித்தி நெடுந்தொடர் வாயிலாக நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மறைவையடுத்து நடிகை ராதிகா இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் ராதிகா வெளியிட்டுள்ள பதிவில், “தமிழில் சித்தி நெடுந்தொடர் வாயிலாக நடிகராக அறிமுகமாகி, டேனியல் என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததன் காரணமாக டேனியல் பாலாஜி என அன்புடன் அழைக்கப்படும் சகோதரர், தமிழ் சினிமாவின் சிறந்த வில்லனாக பார்க்கப்படுபவர் திடீர் மாரடைப்பால் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
இளம் வயதில் மறைந்து மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்ற டேனியல் பாலாஜி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தார்க்கும், தமிழ்த் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.