கோப்புப் படம் 

 
வேலை வாய்ப்பு

ரேடியோகிராபர் பணிக்கு ஜன.4-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அரசு மருத்துவமனைகளில் 67 காலி பணிடங்கள்!

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள ரேடியோகிராபர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின் விவரம்: தமிழ்நாடு மாநில மருத்துவ சார்நிலைப் பணியின்கீழ் வரும் ரேடியோகிராபர் (கதிர்வீச்சு நிபுணர்) பணியில் 67 காலி இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு ரேடியோ டயக்னோசிஸ் டெக்னாலஜியில் 2 ஆண்டுகால டிப்ளமா படித்தவர்கள், ரேடியோகிராபி & இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ டயக்னோசிஸ் டெக்னாலஜி, ரேடியாலஜி & இமேஜிங் டெக்னாலஜி ஆகியவற்றில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 32 ஆகும். எஸ்சி, எஸ்சி - அருந்ததியர், எஸ்டி, பிசி, பிசி - முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி ஆகிய இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 20 சதவீதம், பிளஸ் 2 தேர்வுக்கு 30 சதவீதம், நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு 50 சதவீதம் என மொத்தம் 100 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மொத்த காலி இடங்களில் 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.

உரிய கல்வித் தகுதி உடையவர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளம் (www.mrb.tn.gov.in) வாயிலாக ஜனவரி 4-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், சமூக இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியான காலி இடங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் விரிவாக அறி்ந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT