வேலை வாய்ப்பு

ஆதிதிராவிட வகுப்பினருக்கு மெஷின் ஆபரேட்டர் பயிற்சி - ‘சிப்பெட்’ அறிவிப்பு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: மத்திய அரசு நிதியுதவியுடன் ஆதிதிராவிட வகுப்பினருக்கு மெஷின் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமர் சிஎன்சி மில்லிங் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருப்பதாக சிப்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான நேர்காணல் சென்னையில் நாளை (நவ.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேசிய ஆதிதிராவிடர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், மத்திய அரசின் நிதியுதவியுடன் ஆதிதிராவிட வகுப்பினருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மெஷின் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமர் சிஎன்சி மில்லிங் என்ற பயிற்சியானது சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சிப்பெட் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ளது.

இந்த 4 மாத கால பயிற்சியில் , பிளஸ் 2 முடித்த ஆண், பெண் இருபாலரும் சேரலாம். வயது 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணம், உபகரணங்கள், உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம். இந்த இலவச திறன் பயிற்சியில் சேர விரும்பும் ஆதி திராவிட வகுப்பினர் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் சிப்பெட் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 98405-04889, 75981-45203, 96001-94157 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT