தையூர்: வேலை வாய்ப்பை பெருக்கும் நோக்கில் இளைஞர்களுக்கு 3 மாத திறன் மேம்பாட்டு பயிற்சியும் தனியார் நிறுவனத்தின் சார்பில் 100 சதவீத வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறையின் கட்டுமானத் தொழிலாளர்கள் ஓய்வுக்கூடத்தை அமைச்சர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து படித்த, படிக்காத இளைஞர்களும் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 3 மாத கால திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இதில் முதல் ஒரு மாதம் தையூர் மையத்தில் பயிற்சி நடைபெறும், இதையடுத்து காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்தில் 2 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
ஐடிஐ படித்தவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம். இந்த பயிற்சியில் சேரும் அனைவருக்கும் எல் அண்டு டி நிறுவனத்தின் சார்பில் 100 சதவீத வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். இது மட்டுமின்றி தையூர் மையத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் மற்றொரு திட்டமும் உள்ளது.
இந்த பயிற்சியில் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பொருத்துநர், குழாய் பொருத்துநர், மர வேலை, கம்பி வளைப்பவர் உள்ளிட்ட தொழில் செய்யும் நபர்களுக்கு அவர்கள் செய்யும் வேலையை திறம்பட செய்தல் குறித்து பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கு தினசரி ரூ.800 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, வேலை செய்வோரின் திறன் மேம்படுத்தப்படும். இதன்மூலம் அவர்களுக்கான ஊதியம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதில் சேருவதற்கு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் கட்டுமானத் தொழிலாளர் ஓய்வுக்கூட கட்டிடம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2017-ல் பணிகள் முடிந்து 2018-ம் ஆண்டு திறக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த கட்டிடம் எந்த பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்படவில்லை.
கரோனா கால கட்டத்தில் மட்டும் இந்த கட்டிடத்தில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 72,000 சதுரஅடி உள்ள இந்த கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றதொரு கட்டிடம் திருப்பெரும்புதூர் அருகே எழிச்சூரிலும் இருக்கிறது. இந்த இரு கட்டிடங்களும் வருங்காலத்தில் முறையாக பயன்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.