கோவை: கோவை மாவட்டத்தில் உற்பத்திப் பிரிவின் கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு மற்றும் தொழில் வர்த்தக சபை சார்பில் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித வளம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ஸ்ரீ ராமலு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாளர் தீபக் ராம் பேசியதாவது: கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்ற வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும் அவர்களால் எந்த நிறுவனத்தில் எந்த வகையான தொழிலாளர்கள் தேவை உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளவும், நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவதிலும் சிரமங்கள் உள்ளன.
தொழில் நிறுவனங்களில் குறிப்பாக உற்பத்தி துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் தேவை அதிகம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் தொழில் வர்த்தக சபை சார்பில் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தேவைப்படும் நிறுவனங்கள் முழு விவரங்களுடன் இந்திய தொழில் வர்த்தக சபையின் மூலம் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் நிறுவனங்களுக்கு தகுதியான தொழிலாளர்களை கண்டறிந்து வழங்க அண்ணா பல்கலை மற்றும் சில மையங்களுடன் (நோடல் ஏஜென்சிஸ்) இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவை மாநகரில் விரைவில் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களையும், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகளையும் இணைக்கும் பாலமாக செயல்படும் வகையில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் நாட்களில் கோவை தொழில் நிறுவனங்களில் தற்போது நிலவும் தகுதியான தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.