சென்னை: அரசுப் பணியாளர் தேர்வு எழுதும் போட்டித் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என்று சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகிநகர், எழில்நகர் திட்டகுடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களுக்காக எழில் நகர், சுனாமி குடியிருப்பு பகுதி சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக காவல்துறையில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட தேர்வுக்கான அறிவிப்புகள் வர உள்ளன. இத்தேர்வுக்கான பயிற்சிகளும் இந்த மையத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும்,மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி இளைஞர்களுக்கான (CGL) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் தனியே வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன.
வேலை, கல்லூரிக்கு செல்பவர்கள் பயிலுவதற்காக நாள்தோறும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை10 முதல் 5 மணி வரையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தபகுதி வாழ் தேர்வர்கள் எழில் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.