வேலை வாய்ப்பு

டிட்கோ மற்றும் டிஎன் ஸ்டார்ட்அப் மிஷன் சார்பில் புத்தாக்க நிறுவனங்களுக்கான ‘ஒளிர்’ பயிற்சி பட்டறை

செய்திப்பிரிவு

சென்னை: டிட்கோ மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இன்னோவேஷன் மிஷன் கூட்டு முயற்சியில் புத்தாக்க நிறுவனங்களுக்கான ஒளிர் பயிற்சி பட்டறையை தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANCAM), தமிழ்நாடு நுண்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANSAM). உள்ளிட்ட மூன்று திறன்மிகு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டைடல் பார்க்கில் திறந்து வைத்தார்.

இந்த திறன்மிகு மையங்கள், புத்தாக்க நிறுவனங்களின் வடிவமைப்பு முன்மாதிரி மற்றும் சோதனைகளை விரைவுபடுத்த பெரிதும் உதவுகிறது. புத்தாக்க நிறுவனங்கள் இந்த திறன்மிகு மையங்களின் அதிநவீன வசதிகளை பயன்படுத்தி, தமது தயாரிப்புகளை உகந்த விலையில் விரைவாக சந்தைப்படுத்துவதற்கு இந்த ‘ஒளிர்' நிகழ்வு ஏதுவாக திகழ்கிறது.

250 நிறுவனங்கள்... இந்த ஒளிர் நிகழ்வில் மேம்பட்ட உற்பத்தி, ரோபாட்டிக்ஸ், இ-வணிகம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, அக்ரிடெக், பயோடெக். மெட்டெக், ஹெல்த்டெக், எட்டெக் ஃபின்டெக் மற்றும் ஸ்பேஸ்டெக் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 250 நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில் தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன் பேசும்போது, ‘‘அரசின் பல்வேறு துறைகள் ஒன்றாகவும் மற்றும் தனியார் துறையுடன் இணைந்தும் புத்தாக்க நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கு இந்த 'ஒளிர்' நிகழ்வு சான்றாகத் திகழ்கிறது.

பல மேலைநாட்டு நிறுவனங்கள் தமக்கு தேவையான பொருட்களை நம்நாட்டில் உற்பத்தி செய்கின்றன. தற்போது, இப்பொருட்களை, மீண்டும் அவர்கள் நாட்டிலேயே தயாரிக்க முயல்கின்றன. இதனைத்தவிர்க்க. நாம் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய உற்பத்திமுறையை கையாள வேண்டியுள்ளது. இத்தகையச் சூழலில், உற்பத்தி துறையிலுள்ள புத்தாக்க நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இந்த திறன்மிகு மையங்கள் இன்றியமையாததாக இருக்கும்’’ என்றார்.

டிட்கோ, மேலாண் இயக்குநர் ஜெய முரளிதரன் பேசும்போது, ‘‘மாநில இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு மாற்றாக, தொழில்முனைப்போடு புதிய புத்தாக்க மையங்களை அமைக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்வின்போது 25 புத்தாக்க மையங்கள் டிட்கோவின் திறன்மிகு மையங்களுடன் அவற்றின் வசதிகளை பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.

ஸ்டார்ட்அப் டிஎன் மிஷன் இயக்குநர், சிவராஜா ராமநாதன், டிட்கோ திட்ட இயக்குநர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT