புதுச்சேரி: புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநர் முத்தம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகத்தில் பதிந்து 1.7.2015 முதல் 30.9.2018 வரை, பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்துக்கொள்ள தளர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த தளர்வு 4.4.2023 முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். எக்காரணம் கொண்டும் இச்சலுகை கண்டிப்பாக நீட்டிக்கப்படமாட்டாது. 1.7.2015-க்கு முன்னர் தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாது.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை, அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பழைய வேலைவாய்ப்பு அட்டை அல்லது புதிய வேலைவாய்ப்பு அட்டை (மறுபதிவு செய்தவர்கள்),வேலைவாய்ப்பகத்தில் பதியப்பட்ட சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் இணைக்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவுகளுக்கு பழைய மூப்பு தேதி வழங்கப்படும். இந்த புதுப்பித்தலுக்கு பிறகு கேட்கப்படும் வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கு மட்டுமே, புதுப்பிக்கப்பட்டவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.