புதுடெல்லி: அடுத்த வாரம் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள கர்நாடகாவை தவிர்த்து, நாடு முழுவதும் 45 இடங்களில் 71,000 பேருக்கு பணிநியமனத்துக்கான ஆணைகளை காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 13-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழங்கப்பட திட்டமிட்டுள்ள பணி ஆணைகளில் அதிகபட்சமாக ரயில்வேயில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
அதைத் தொடர்ந்து, அஞ்சல், நிதி சேவை துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திலும் கணிசமான பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. ரயில்வேயில் குரூப்-சி பிரிவு சேவைகளுக்காக அதிக அளவில் ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இவர்களில், கேங்மேன், பாயிண்ட்மேன் உள்ளிட்டோரும் அடங்குவர். அத்துடன் கமர்ஷியல் கிளர்குக்கான பணிநியமன ஆணைகளும் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் 2024-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக, மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தலைமையில் வேலைவாய்ப்பு மேளாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரயில்வே அமைச்சகம், 3.15 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் சமீபத்தில் அறிவித்தது. அவற்றில் பெரும்பாலானவை குரூப்-சி பிரிவு பணியிடங்களாகும்.
மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், “2023 மார்ச் இறுதிக்குள் குரூப்-சி பணிகளுக்கு 38,000 பேரை தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.