வேலை வாய்ப்பு

தேர்வு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் - ‘அக்னிபாத்’ திட்ட விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

திருப்பூர்: இந்திய ராணுவத்தில் இளைஞர் களுக்கு குறுகிய கால ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யும் திட்டமாக, அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகளும் நடைபெற்றன. தற்போது அந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை, தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ராணுவம் சார்பில் விழிப்புணர்வாக எடுத்து கூறப்பட்டு வருகிறது.

அதன்படி, திருப்பூர் காந்தி நகர் தனியார் பள்ளி வளாகத்தில், ‘இந்திய ராணுவ ஆள்சேர்ப்பில் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. ராணுவத்தின் கோவை ஆள்சேர்ப்பு இயக்குநர் பரத்வாஜ் பேசும்போது, "ராணுவத்துக்கு ஆள்சேர்ப்புக்கான முறை மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி சி.இ.இ. என்ற பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் முதற்கட்ட தேர்வு நடைபெறும். கடந்த மாதம் 16-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப் பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சி.இ.இ. எனும் ஆன்லைன் பொதுத் தேர்வு நாடு முழுவதும் ஏப்ரல் 17முதல் 30ம் தேதி வரை 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும்.

இது தொடர்பான அனைத்து விவரங்களையும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்" என்றார். ராணுவத்தில் சேர்வது மற்றும்அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து, விளக்கப் படம் மூலமாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. ராணுவ ஆள்சேர்ப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT