ஓசூர்: ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தொழில் தொடங்க 3 நாட்களுக்குள் ரூ.10 கோடி வரை கடன் பெறலாம் என இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் (சிட்பி) தலைமை மேலாண் இயக்குநர் தெரிவித்தார்.
ஓசூரில் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் புதிய கிளையை வங்கியின் தலைமை மேலாண் இயக்குநர் ராமன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 18 மாதங்களாக மேற் கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக வங்கியின் கடன் வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தொழில்முனைவோர் வங்கிக்கு வராமலேயே ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து, அவர்களின் ஜிஎஸ்டி, வருமான வரி மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் அடிப்படையில் ரூ.10 கோடி வரை 3 நாட்களுக்குள் கடன் வழங்கப்படும்.அதேபோல, வங்கி வாடிக்கையாளர்களுக்கு 15 நிமிடத்தில் ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் முறையும் அமல்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வங்கியின் சென்னை மண்டல மற்றும் பொது மேலாளர் ரவீந்திரன் கூறும்போது, “தமிழக அரசுடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிடும்.
இதன் மூலம் அமைப்புசாரா தொழில் முனைவோர்களாகத் தமிழகத்தில் உள்ள சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்பாடு அடைய குறைந்த வட்டியில் கடன் வசதி செய்து தரப்படும்” என்றார். இந்நிகழ்வில், ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.