சென்னை: தேசத்துக்கான பாதுகாப்பை வழங்கும் பணியில் ஈடுபட வரும் இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பு அவசியம் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரியில்இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை அறியச்செய்யும் நோக்கில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. இந்நிகழ்வை சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்து வழங்கின.
இதன் 11 மற்றும் 12-ம் பகுதிகள் பிப்.18, 19-ம் தேதிகளில் நடைபெற்றன. இதில், இந்தோ –திபெத் எல்லைப்படையின் டெபுடி கமாண்டன்ட் வி.ஆர்.சந்திரன், ‘இந்தோ –திபெத் எல்லைப்படை (ITBP), மற்றும் சசஸ்த்திர சீமா பல் (SSB) ஆகியவற்றில் உள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசினார். அப்்போது, ‘‘எல்லைப் பகுதியில் அண்டை நாட்டின் ஊடுருவலைத் தடுப்பதோடு, கடத்தல், நக்சல்களின் தாக்குதல்களும் நிகழாமல் எல்லை பாதுகாப்புப் படை தடுக்கிறது. நவீன தொழில் நுட்பத்தோடு செயல்படும் இப்படையில் அர்ப்பணிப்போடு பணியாற்ற இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்’’ என்றார்.
ஹெச்ஏஎல் முதன்மை மேலாளர் (வடிவமைப்பு) க.செல்வி, ‘பொதுத்துறையில் உள்ள (ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் - HAL) வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசும்போது, ‘‘1940-ல் இந்த நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏர்கிராப்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. முப்படைகளில் விமானப்படைக்கு தேவையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தளவாடங்கள், உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்துதரும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது’’என்றார்.
இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளை ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடினார். அவர் கூறும்போது, ‘‘நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களை வருத்திக்கொண்டு பணி செய்து வருகிறார்கள். அதனால்தான் அவர்களை ‘பனி மலையின் பாதுகாவலர்கள்’ என்று அழைக்கிறோம். மத்திய – மாநில அரசுகளுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக செயல்படும் சிறப்புக்குரியது HAL எனப்படும் இந்திய விமானவியல் நிறுவனமாகும். இது நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு சிறப்பான பணியை ஆற்றி வருகிறது’’ என்றார்.
இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த 2 நாள் நிகழ்வுகளையும் தவறவிட்டவர்கள் https://www.htamil.org/Session11, https://www.htamil.org/Session12 என்ற லிங்க்குகளில் காணலாம்.