சென்னை: அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ பணிகளில் சேர மார்ச்15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் (ஆண்) பணிகளுக்கான அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு மையத்தின் கீழ் செயல்படும் 11 மாவட்டங்களை சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள், அக்னிவீர் பிரிவில் பொது, தொழில்நுட்பம், எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் சேர விரும்புவோர் www.joinindianarmy.nic.in இணையதளத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஏப்.17-ம்தேதி அளவில் இணையவழியில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-25674924 என்ற தொலைபேசிஎண்ணை தொடர்பு கொள்ளலாம். கடுமையான முயற்சியும், தேர்வுக்கான பயிற்சியும் மட்டுமே பணிக்கு தேர்வாக உதவும். இடைத்தரகர் போன்றவர்களை விண்ணப்பதாரர்கள் அணுக வேண்டாம்.